Saturday, September 26, 2015

மீண்டும் மெக்பெத்!

ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் பிரதானமானது ‘த ட்ராஜெடி ஆஃப் மெக்பெத்’. மத்திய கால ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மெக்பெத் மிகப் பெரிய போர் வீரன்; தன்னை உணராதவன்; மனைவியின் ஆலோசனையைக் கேட்டு மதியிழந்தவன். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசையில் மன்னனைக் கொல்கிறான். நண்பனின் வாரிசு அரசனாகக் கூடும் என நண்பனைக் கொல்கிறான்.

மன்னனான பின்னர் அவனால் நிம்மதியாக ஆட்சி நடந்த முடிந்ததா, ஆசையில் ஆட்சியைப் பிடித்த அவனும் அவனுடைய மனைவியும் இன்பத்தை அனுபவித்தார்களா என்று கேட்டால் அதுதான் வாழ்வின் சுவாரஸ்மான திருப்பம். மன்னனைக் கொல்லத் தூண்டிய குற்றவுணர்வில் லேடி மெக்பெத் அவதியுறுகிறாள். ஆட்சி அதிகார போதையில் மெக்பெத் தன் நிம்மதியை இழக்கிறான், சீரான வாழ்வுக்குப் பதில் சீரழிவே மிஞ்சியது.

ஒரு கதையாகப் பல்வேறு திருப்பங்களையும் அதிகார போதையையும் நவீன மனிதனின் உளவியல்ரீதியான அலைக்கழிப்புகளையும் உள்ளடக்கிய நாடகம் இது. அதனால் இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும். ஆட்சி அதிகாரத்தின் மீது நாட்டம் கொண்டு கேடுகெட்ட செயல்களில் ஈடுபடும் மனிதர்கள் இருக்கும்வரை மெக்பெத் நாடகம் உயிர்ப்புடன்தான் இருக்கும்.

இந்தக் கதை பிடித்துப்போனதால் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரோசோவா இதை அடிப்படையாகக் கொண்டு, அதில் ஜப்பானியக் கலாச்சார நுட்பங்களைக் கலந்துதான் ‘த்ரோன் ஆஃப் ப்ளட்’ படத்தை உருவாக்கினார். பிரபல இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கி இந்தக் கதையைப் படமாக்கியிருக்கிறார். இவை தவிர அநேக திரையாக்கங்களைக் கண்ட நாடகமான இது இங்கிலாந்தில் இப்போது மீண்டும் படமாகியிருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் நடத்தியிருக்கிறார்கள். ‘ஸ்நோடவுன்’ படத்தின் மூலம் அறியப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய இயக்குநர் ஜஸ்டின் கர்சல் இயக்கியிருக்கும் மெக்பெத், 2015 மே 23 அன்று கான் படவிழாவில் முதலில் திரையிடப்பட்டது. கானின் தலையாய விருதான தங்கப் பனைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ‘இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’, ‘12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் நடிகர் மைக்கேல் ஃபாஸ்பெண்டர் இந்தப் படத்தில் மெக்பெத்தின் வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். ‘எ வெரி லாங் எண்கேஜ்மெண்ட், இன்ஸெப்ஷன் ஆகிய படங்களின் வழியே பரிச்சயமாகியிருக்கும் நடிகை மரியான் காட்டிலார்டு லேடி மெக்பெத் வேடமேற்றிருக்கிறார்.

இதன் முதல் டீஸர் 2015 ஜூன் 4 அன்று யூடியூபில் வெளியானது. அதை 26 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். மெக்பெத்தின் கதை எத்தனை முறை படமானாலும் அத்தனை முறையும் அதைப் பார்க்க ரசிகர்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் படைப்புத் திறனால் அது சாத்தியமாகியிருக்கிறது. ஏற்கெனவே பார்த்த கதைதானே என ரசிகர்கள் இந்தக் கதையை ஒதுக்குவதில்லை என்பதற்கு வெளியாகியிருக்கும் பல மெக்பெத்கள் சான்றுகள்.
அதே எதிர்பார்ப்புடன்தான் இப்போது அவர்கள் இந்த மெக்பெத்துக்கும் காத்திருக்கிறார்கள். குருதியின் சேற்றில் கால் பதித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இந்த மெக்பெத், கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை வழியில் விடுதலை வாங்கிக்கொடுத்த காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று இங்கிலாந்தில் வெளியாகப்போகிறது என்பது ஒரு முரண்நகையே. அமெரிக்காவில் டிசம்பர் மாதம்தான் திரைக்கு வரவிருக்கிறது.

செப்டம்பர் 25 தி இந்து நாளிதழில் வெளியானது

Saturday, September 19, 2015

காட்டுச் சிறுவனின் ஆக்‌ஷன் அவதார்!

வால் டிஸ்னி பிக்ஸர்ஸ் தயாரிப்பில் 1967-ல் வெளியான சாகசத் திரைப்படம் த ஜங்கிள் புக். இதே பெயரில் ரூத்யார்டு கிப்லிங் 1894-ல் எழுதிய கதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அனிமேஷன் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நான்கு மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் 205.8 மில்லியன் டாலர் வசூலித்துக் கொடுத்திருக்கிறது. இப்போது இயக்குநர் ஜான் ஃபேவ்ரோ இயக்கத்தில் மீண்டும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் 1967-ல் வெளிவந்த திரைப்படத்தைவிட அதிக சுவாரஸ்யத்தைத் தரும் வகையில் இப்போது இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. முதலில் அனிமேஷன் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். பின்னர் லைவ் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். அதன் பின்னர் இரண்டையும் ஒன்று சேர்த்துவிட்டிருக்கிறார்கள். பார்ப்பதற்கு லைவ் ஆக்‌ஷன் படம் போல் தென்பட்டாலும் இந்தப் படத்தில் மோக்லி வேடமேற்றிருக்கும் நீல் சேதி மட்டுமே உயிருள்ள மனிதன்.

மீதி அனைத்துமே கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டவை. படத்தில் இடம்பெற்றிருக்கும் விலங்குகளுக்கு பில் முர்ரே, பென் கிங்ஸ்லி, இட்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் வால்கன் போன்ற பல பிரபலங்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். கம்ப்யூட்டரில் அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் விலங்குகள் பார்க்க உயிருள்ள மிருகங்கள் போன்றே இருக்கின்றன. கார்ட்டூன் படங்களுக்கு உயிரூட்டப்பட்டது போன்ற தோற்றம் இல்லை.

ஒரு பிரம்மாண்டமான பயணத்தின் தொடக்கம் போன்று வெளியாகியிருக்கும் இதன் ட்ரெயிலர் வெளியிடப்பட்ட ஒரு நாளில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த ட்ரெயிலர் தரும் பிரமிப்பைப் பார்க்கும்போது முழுப் படத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றாமல் இருக்காது.

காட்டில் மோக்லி எதிர்கொள்ளும் அத்தனை விலங்குகளையும் கம்ப்யூட்டரில் அனிமேஷன் தொழில்நுட்பத்தின் உதவியால்தான் உருவாக்கியிருக்கிறார்கள் என்ற நினைவே எழாதவண்ணம் அவை நிஜ விலங்குகள் போலவே கிலி ஏற்படுத்துகின்றன. காட்டில் மாட்டிக்கொள்ளும் மோக்லி புலி, யானை போன்ற பல வன விலங்குகளிடமும் மாட்டிக்கொண்டு தப்பித்துவிடுகிறான் ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் மாட்டிக்கொள்வதையும் தப்பிப்பதையும் பார்ப்பவர்களுக்கு உயிர் போய் உயிர் வருகிறது.

அடுத்தடுத்து என்ன நிகழுமோ என்னும் எதிர்பார்ப்பையும் என்ன அசம்பாவிதம் சம்பவிக்குமோ என்னும் அச்சத்தையும் தரும் வகையிலும் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாகசக் காவியம் போல் இந்தப் படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜான் ஃபேவ்ரோ. இந்தப் படத்தில் நடித்திருக்கும் நீல் சேதி இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் முயற்சியில் சுமார் ஆயிரம் பேரைத் தாண்டி வெற்றிபெற்றிருக்கிறான்.

அவனுக்கு அடுத்து இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவரப்போவது அந்தப் பாம்புதான். அதன் முன்பு மிரட்சியுடன் நிற்கிறான் மோக்லி ஆனால் பாம்போ அவனுக்குத் தைரியமூட்டுகிறது. எத்தனையோ ஆபத்துகள்; அத்தனையையும் தனி ஒருவனாகச் சமாளித்து சிறுவன் மோக்லி மேற்கொள்ளும் சாகசப் பயணத்தின் ஒவ்வொரு கணமும் பார்ப்பதற்கு அலுக்காது.

படத்தின் காட்சிகள் அனைத்தையும் ஒரு சிற்பம்போல் செதுக்கியிருக்கிறார்கள். படத்தின் உயிரோட்டமான இசையும் நம் கண் முன்னே தெரியும் அந்த மாய உலகத்தை நிஜ உலகம் என நம்பவைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லரே படம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதைச் சொல்லிவிடுகிறது. அந்தப் பிரமாண்டத்தின் முழுப் பரிமாணத்தையும் பார்க்க நீங்கள் தியேட்டருக்குத்தான் செல்ல வேண்டும்.

செப்டம்பர்18 தி இந்து நாளிதழில் வெளியானது

Saturday, September 12, 2015

உச்சி தொடும் பயணம்... உயிரே பணயம்!

உலகின் மிக ஆபத்தான பகுதிகளுள் ஒன்று எனச் சொல்லப்படுவது எவரெஸ்ட் சிகரப் பகுதி. இந்தச் சிகரத்தின் உச்சியைத் தொடும் சாகசப் பயணத்தில் உயிரைப் பணயம் வைத்துச் செல்லும் பலர் வெற்றிபெற்றுள்ளனர், பலர் வாழ்வை இழந்துள்ளனர். 1996-ம் ஆண்டில் எவரெஸ்டில் நிகழ்ந்த பேரழிவுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வில்லியம் நிக்கல்சனும், சைமன் போஃபாயும் எழுதிய கதையை ‘எவரெஸ்ட்’ என்னும் பெயரிலேயே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பால்டஸார் கார்மேகர்.

ஜூனில் வெளியான இப்படத்தின் ட்ரெயிலரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் யூடியூபில் பார்த்துள்ளனர். இப்படத்தைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் கொண்டுள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று.

உயிரைத் துச்சமாக மதித்து ஜேஸன் க்ளார்க் தலைமையிலான ஒரு குழுவும், ஜேக் கிலினால் தலைமையிலான ஒரு குழுவும் எவரெஸ்டில் ஏறுகின்றன. அப்போது அவர்கள் எதிர்கொள்ளும், ஒருபோதும் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாத தடைகளை, நெருக்கடிகளை, அவற்றைச் சமாளித்து அவர்கள் மேற்கொள்ளும் துணிச்சலான பயணத்தை மயிர்க்கூச்செறியும் வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

உறைந்த பனிமலையில் காற்றுகூட அரிதான சூழலில் எப்படியும் உச்சியைத் தொட வேண்டும் என்ற வெறியுடன் செல்லும் குழுவினருடன் ரசிகர்களும் செல்லும் உணர்வைத் தரும் வகையில் காட்சிகள் உயிரோட்டத்துடன் படமாக்கப்பட்டுள்ளன. பரந்த பனிமலையின் தோற்றத்தைப் பார்க்கும்போதும் அதில் அவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான சாகசப் பயணத்தைக் காணும்போதும் மனத்தில் எழும் கிலி அடங்குவதேயில்லை.

உயர்ந்து எழுந்து நிற்கும் மலையில் குழுவினர் ஏறிக்கொண்டிருக்கும்போது உலகையே விழுங்கிவிடுவது போன்ற பெரும் பசியுடன் சரிந்து விழும் பெரும் பனித் திரளில் குழுவினர் மாட்டிக்கொள்வார்களோ என்ற பதைபதைப்பை மனம் உணர்கிறது. திகில் சிறையில் மாட்டிக்கொண்டு லப்டப் என இதயம் துடிக்கும் ஓசையைத் துல்லியமாகக் கேட்கும் அனுபவத்தை இப்படம் உருவாக்கிவிடுகிறது.

இயற்கையின் சீற்றத்தை எதிர்த்துத் துணிச்சலுடன் முன்னேறி இயற்கையின் குழந்தையான எவரெஸ்டின் உச்சியை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்று தொடர்ந்து முன்னேறும் குழுவினரின் ஒவ்வொரு அடியிலும் ஆபத்து காத்திருக்கிறது. அத்தனையையும் சமாளித்துச் செல்லும் அவர்கள் இறுதியில் உச்சியைத் தொட்டார்களா, அதலபாதாளத்தில் வீழ்ந்தார்களா என்ற விடைதெரியாத கேள்விக்கு விடைகாண இந்தப் படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும்.

செப்டம்பர் 18-ல் திரையரங்குக்கு வரவிருக்கிறது இந்தப் படம். பயம், துணிச்சல், நம்பிக்கை, காதல் போன்ற உணர்வுகள் பின்னிப்பிணைந்த திரைக்கதையின் பயணத்தில் முன்னணியில் இருப்பது சாகச உணர்வு மட்டுமே. சாகச விரும்பிகளின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் எவரெஸ்ட் நிச்சயம் அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்றே தோன்றுகிறது.
செப்டம்பர் 11 தி இந்து நாளிதழில் வெளியானது