Tuesday, April 12, 2016

திசை மாறும் தேசிய விருதுகள்?

(தி இந்துவில் 2016 ஏப்ரல் 1 அன்று வெளியானது) 

விருதும் சர்ச்சையையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்தியத் திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகளும் அப்படித்தான். 2015-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் பற்றிய அறிவிப்பு கடந்த 28-ம் தேதியன்று பிற்பகலில் வெளியானது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல சர்ச்சையான கருத்துகள் சமூக வலைதளங்களில் உலவ ஆரம்பித்தன. சர்ச்சைக்கு முதலடி எடுத்துக் கொடுத்தது ‘பாகுபலி’. இந்திய அளவில் சிறந்த படத்துக்கான விருது தெலுங்குப் படமான ‘பாகுபலி’க்கு என்ற அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. சினிமாவைத் தொடர்ந்து கவனிக்கும் பலருக்கும், திரைக்கதையில் பல குறைகளைக் கொண்ட அம்புலிமாமா கதைப் படமான ‘பாகுபலி’க்குச் சிறந்த படத்துக்கான விருதா என்ற வியப்பு மேலிட்டது.

பாகுபலி
இந்த தேசிய விருதுகளில் எந்த சர்ச்சையும் இல்லை என்று பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால், எப்போதும் போலவே இந்த ஆண்டும் சர்ச்சைகள் தாரளமாகப் புழங்கின. ‘பாகுபலி’யில் வலியுறுத்தப்பட்டிருந்த ராஜ விசுவாசம், பண்டைய சமூக அமைப்பைத் தூக்கிப் பிடித்தல் ஆகியவை காரணமாக மத்திய அரசு விருது அளித்திருக்கிறதா என்னும் சந்தேகத்தைப் பல தரப்பினரும் எழுப்பினர். இதை உறுதிப்படுத்தும் வகையில், எந்த மாநில மொழியுமல்லாத சம்ஸ்கிருத மொழியில் உருவான ‘பிரியமானஸம்’ படத்துக்கும் விருது அளிக்கப்பட்டிருக்கிறது. திரைப்படம் எடுக்கச் சிறந்த மாநிலமென குஜராத்துக்குக் கிடைத்திருக்கும் விருதும் எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

இப்படியான காரணங்களால் காட்டமான கேள்விக் கணைகளும் விமர்சனக் கருத்துகளும் தேர்வுக் குழுவைப் பதம்பார்க்கின்றன. பஞ்சாபைச் சேர்ந்த இயக்குநர் குர்விந்தர் சிங், நல்லறிவு படைத்த தேர்வுக் குழு ‘பாகுபலி’யைச் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்குமா என்ற கடுமையான கேள்வியை எழுப்பியிருக்கிறார். அத்துடன் நிறுத்தவில்லை அவர். இந்த ஆண்டு வழங்கப்பட்ட தேசிய விருதுகள் கேலிக்கூத்து எனவும், மாநில மொழிப் படங்களுக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்பட்டிருக்கிறது, பொழுதுபோக்குப் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுக் கொந்தளித்திருக்கிறார்.

கான் பட விழா உள்ளிட்ட உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட அவர் இயக்கிய ‘சௌதி கூட்’ திரைப்படம் தேசிய அளவில் சிறந்த படம் என்ற விருதுக்கான தகுதியைக் கொண்டிருந்தபோதும் சிறந்த மாநில மொழித் திரைப்படப் பிரிவிலேயே அதற்கு விருது கிடைத்ததைப் பெரும் ஏமாற்றமாகக் கருதுகிறார் அவர். சிறந்த ஜனரஞ்சக படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் ஆகிய பிரதான விருதுகள் அனைத்தையும் இந்தித் திரையுலகம் தட்டிக்கொண்டு போனதால் மாநில மொழிப் படங்களை உருவாக்குவோர் பலத்த ஏமாற்றமடைந்துள்ளனர் என்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.

பாஜிராவ் மஸ்தானி
முதன்முறையாகச் சிறந்த இயக்குநர் விருது பெற்றதில் மகிழ்ந்திருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி, ‘பாஜிராவ் மஸ்தானி’யில் சிறப்பாகப் பங்களித்த தீபிகா படுகோன் அல்லது பிரியங்கா சோப்ராவுக்கு விருது கிடைத்திருக்கலாம் என்பதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். அதேபோல் இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் கடுமையான உழைப்பைத் தந்திருக்கும் விக்ரமுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது எனத் தமிழ்த் திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், ஒப்பனையால் மட்டுமே தனித்துத் தெரிந்த அந்தக் கதாபாத்திரத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்ததே வியப்பானது என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. சர்வதேசக் கவனம் பெற்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மஸான்’ படத்துக்கு இந்திரா காந்தி பெயரிலான சிறந்த புதுமுக இயக்குநர் விருதே கிடைத்திருக்கிறது. விருதுக்குரிய படங்களைத் தேர்வு செய்யும் குழுவினரின் ரசனையைப் பொறுத்தே தேர்வுகள் அமைகின்றன. கடந்த வருடம் நீதியமைப்பைக் கேள்வி கேட்ட துணிச்சல் மிக்க படமான ‘கோர்ட்’டுக்குச் சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது. இந்த வருடம் பொழுதுபோக்குப் படங்கள் அதிகமான விருதுகளை அள்ளிக் குவித்துள்ளன. விருதுப் படங்களில் கலைத் தன்மை சிறிதேனும் தூக்கலாக இருக்கும் என்பது பொதுவான புரிதல். அப்படியான படங்களை மட்டுமே விருதுக்காக விண்ணப்பிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அப்படியில்லாமல் ரசிகர்களைக் கற்பனை உலகின் மயக்கத்தில் ஆழ்த்தும் படங்களுக்கு விருதுகளை வழங்கிக் கவுரவிக்கும்போது, கலை தாகத்துடன் படமெடுத்த கலைஞர்கள் மனம் வருந்துவது இயற்கை. ஆனால், கலைப் படங்களுக்கு மட்டுமே விருது வழங்க வேண்டுமா பொழுதுபோக்குப் படங்களுக்கு வழங்கக் கூடாதா என்று மறு தரப்பினர் வாதிட்டால் அதையும் பரிசீலிக்கத்தான் வேண்டும்.

விசாரணை
அறுபதுக்கும் மேற்பட்ட இந்திப் படங்கள், தூங்கா வனம், உத்தம வில்லன், தனி ஒருவன், கிருமி, தாரை தப்பட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள், தெலுங்கு மொழிப் படங்கள் பதினொன்று, சம்ஸ்கிருத மொழிப் படங்கள் இரண்டு உள்ளிட்ட 308 படங்கள் விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்தன. இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான ரமேஷ் சிப்பி தலைமையிலான பதினோரு பேர் குழுதான் இந்த ஆண்டுக்கான விருதுக்குரிய படங்களைப் பரிந்துரைத்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகச் சிறந்த படத் தொகுப்புக்கான விருதைத் தமிழகம் தட்டிச் சென்றிருக்கிறது. படத் தொகுப்பு உள்ளிட்ட மூன்று விருதுகள் ‘விசாரணை’ படத்துக்குக் கிடைத்திருக்கின்றன. இப்படம் அதற்கான தகுதி கொண்டது என்பதில் சந்தேகமில்லை. ‘ஆடுகளம்’ படத்துக்கு அதிக எண்ணிக்கையிலான விருதுகள் கிடைத்தபோது சில மாற்றுக் கருத்துகள் எழுந்தன. ‘ஆடுகள’த்தின் இயக்குநர் வெற்றி மாறனின் குரு பாலு மகேந்திரா அப்போதைய விருதுக் குழுவில் இருந்தார். இப்போதும் அதேபோல் ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது. விருதுக் குழுவில் கங்கை அமரன் இடம்பெற்றிருந்த நிலையில், ‘தாரை தப்பட்டை’யில் சிறந்த பின்னணியிசை அமைத்ததற்காக இளையராஜாவுக்கு ஐந்தாம் முறையாகத் தேசிய விருது கிடைத்திருக்கிறது.

சசிகுமார், பாலா, இளையராஜா, வரலட்சுமி
இளையராஜா இசை தொடர்பான எல்லா வித விருதுக்கும் தகுதியானவர், அவரால் விருதுகளுக்குத்தான் பெருமை என அவருடைய ரசிகர்கள் புளகாங்கிதத்துடன் சொல்கிறார்கள். ஆனால், ‘தாரை தப்பட்டை’யில் விருதுபெறும் அளவுக்குச் சிறப்பான பின்னணியிசை அமைக்கப்பட்டிருந்ததா எனக் கேள்வி எழுப்புகிறார்கள் விமர்சகர்கள். ‘தாரை தப்பட்டை’போன்ற மிகச் சாதாரணப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருப்பதால், அவரது ஆயிரமாவது படம் என்ற விளம்பரத்தின் பங்கு விருது வழங்கலில் ஆதிக்கம் செலுத்தியிருக்குமோ என்றும் விமர்சகர்கள் சந்தேகம் கொள்கிறார்கள். இயக்குநர் பாலா படங்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு விருதைப் பெற்றுவருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சிறந்த கலை மற்றும் பண்பாட்டுப் படம் என்ற பிரிவில் இயக்குநர் அம்ஷன் குமார் இயக்கிய ‘யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி’ என்னும் ஆவணப் படம் தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. சமூக வலைத் தளங்களில் இந்தச் செய்தி பகிரப்பட்ட அளவுக்கு ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெறவில்லை. ஆவணப் படம் தொடர்பான நமது கவனமின்மையையே இது காட்டுகிறது. மேலும், திரைப்படம் குறித்து எழுதித் தள்ளும் தமிழ் மொழியிலிருந்து ஒரு நூல்கூட விருதுக்காக விண்ணப்பிக்கப்படவே இல்லை என்பதுவும் வருத்தமான செய்தி.

Saturday, April 9, 2016

ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்!

(தி இந்துவில் 2016 ஏப்ரல் 8 அன்று வெளியானது)

ஹாலிவுட் பட ரசிகர்களின் விருப்பத்துக்குரிய படங்களில் ஒன்று பென்-ஹர். 1959-ம் ஆண்டில் வெளியாகி உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற படம் இது. ஒரு காவியமாகப் போற்றப்படும் இந்தப் படம், அந்த ஆண்டில் 11 ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் சென்றது. வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. இந்தப் படத்துக்கு அடிப்படையான வரலாற்று நாவல் பென்-ஹர்: எ டேல் ஆஃப் த கிறைஸ்ட் (1880). இதை எழுதியவர் லெவ் வாலஸ் என்னும் அமெரிக்க எழுத்தாளர். 19-ம் நூற்றாண்டில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய கிறிஸ்தவ நூல் இது என்று சொல்லப்படுகிறது. இந்த நாவல் இதுவரை நான்கு முறை படமாக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாவது முறையாகவும் இதே நாவல் இப்போது ஹாலிவுட்டில் படமாக உருவாகியிருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாக உள்ளது.

ரோமைச் சேர்ந்த பால்ய நண்பனால் தவறாகக் கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு அடிமையாகக் காலங்கழிக்கும் யூத பிரபுவின் கதை இது. அத்தனை துயரங்களையும் பொறுமையுடன் எதிர்கொண்டு தனக்குத் துரோகமிழைத்த நண்பனைப் பழிவாங்க சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் ஜூடா பென்ஹர். இந்நிலையில் இவன் நாசரேத்தின் இயேசுவை அடிக்கடி சந்திக்க சந்தர்ப்பம் அமைகிறது. அவருடனான சந்திப்பு ஜூடா பென் ஹர் வாழ்வில் மாற்றத்தை உருவாக்குகிறது. இப்படியாகப் போகும் இந்தப் படத்தின் திரைக்கதையை கெயித் ஆர் க்ளார்க்கும் ஜான் ரிட்லியும் எழுதியிருக்கிறார்கள்.

ஜூடா பென்ஹர் வேடமேற்றிருக்கிறார் ஜேக் ஹஸ்டன் என்னும் ஆங்கில நடிகர். மார்கன் ஃப்ரீமேன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். திமுர் பிக்மாம்பிதவ் என்னும் ரஷ்ய இயக்குநர் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆலிவர் உட். 3 டியில் தயாராகியிருக்கும் இந்தப் படம் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட் என்றும் சொல்லும்படியாக அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்கிறது இதன் டிரெயிலர். பாராமவுண்ட் பிக்சர்ஸ், எம்.ஜி.எம். பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை விநியோகிக்கின்றன. ரசிகர்கள் மனதில் காவியமாக நிலைத்துவிட்ட பென்ஹர் (1959) படத்தை மிஞ்சும் வகையில் இப்படம் இருக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Saturday, April 2, 2016

அம்ஷன் குமாருக்கு தேசிய விருது


இங்கிலாந்தில் வாழும் ஆர். பத்மநாப ஐயரின் ஊக்கத்தின் பேரில் அம்ஷன் குமார் உருவாக்கிய படைப்பே யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி எனும் ஆவணப்படம். தஞ்சாவூர்ப் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டாலும் இலங்கையில் இணுவில் என்னுமிடத்தில் பிறந்து, அளவெட்டியில் வாழ்ந்த தவில் இசைக் கலைஞர் யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி. பிரபல நடிகரோ அரசியல் தலைவரோ பெறுவதைப் போன்ற வெகு மக்கள் அபிமானத்தைப் பெற்ற கலைஞர் அவர். அப்படியான கலைஞர் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை விவரிக்கும் ஆவணங்கள் மிகவும் சொற்பமே.


அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா எனப் பல நாடுகளில் வாழும் இசைக் கலைஞர்கள், இசை ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், தெட்சிணாமூர்த்தியின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரிடம் தெட்சிணாமூர்த்தி பற்றிய தகவல்களைப் பெற்று, அதன் மூலம் அந்த இசைக் கலைஞர் பற்றிய முழுச் சித்திரத்தைத் தீட்டியிருக்கும் பாங்கு தனித்துவமிக்கதாக உள்ளது. தன்னிடம் கிடைத்த மிகச் சில ஆவணங்களின் வழிகாட்டுதலோடு மிகவும் கொண்டாடப்பட்ட இசைக் கலைஞரை உலகுக்குப் பிரபலப்படுத்தும் வகையிலான ஆவணப் படத்தைக் கர்ம சிரத்தையாக எடுத்து வெளியிட்டிருக்கும் அம்ஷனுக்கு அதற்கான தேசிய விருது கிடைத்திருப்பது சரியான சமயத்தில் கிடைத்திருக்கும் தகுந்த அங்கீகாரமே.

Saturday, March 5, 2016

முதல் பரிந்துரையில் ஆஸ்கர்!

(தி இந்துவில் 04.03.2016 அன்று வெளியானது)

ஆஸ்கர் விருதுக்காகப் பல ஆண்டுகள் போராடும் நடிகர்கள் மத்தியில் அவ்விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட முதல் முறையே ஆஸ்கரை வென்றிருக்கிறார் நடிகை ப்ரே லார்சன். லென்னி ஆப்ரஹம்சன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான 'ரூம்' திரைப்படத்துக்காக இந்த விருதைப் பெற்றிருக்கும் லார்சன் இதே படத்துக்காக கோல்டன் க்ளோப் விருதையும், பாப்தா விருதையும் இந்த ஆண்டு வென்றிருக்கிறார். தன் மகன் ஜேக்குடன் ஒரு சிறிய அறையில் தங்கியிருக்கும் ஜாய் என்னும் தாய் கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் ஏற்றிருந்தார் லார்சன்.

ஜேக்கின் தந்தையான நிக்கால் ஏழாண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டிருப்பார் ஜாய். மகன் உறங்கும் பல சமயங்களில் நிக், ஜாயுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவது வழக்கம். இத்தகைய துயரார்ந்த கதாபாத்திரமான ஜாய் வெளிப்படுத்த வேண்டிய அத்தனை உணர்வுகளையும் மிகவும் தத்ரூபமாக வெளிப்படுத்தித் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிலைநிறுத்திக்கொண்டார் லார்சன். அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டுவிட்டார் என்பதுதான் அவருடைய தனிச் சிறப்பு.

தனது துறை நடிப்புதான் என்பதை ஆறு வயதிலேயே முடிவு செய்துவிட்டார் லார்சன். 1989-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று கலிஃபோர்னியா மாகாணத்தின் ஸேக்ரமெண்டோ என்னுமிடத்தில் பிறந்தார். நடிப்புத் துறையில் முன்னேற வேண்டும் என்னும் தனது கனவு கைகூட வேண்டும் என்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குத் தன் தாயுடனும் சகோதரியுடனும் குடியேறியவர் அவர். முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

2003-ல் டிஸ்னியின் தொலைக்காட்சிப் படமான ‘ரைட் ஆன் ட்ராக்’கில் நடித்தார். பாடகியாக அவதாரமெடுத்த லார்சன் 2005-ல் தனது ஆல்பமான ‘ஃபைனலி அவுட் ஆஃப் பி.இ.’யை வெளியிட்டார். சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை அது பெற்றது. 2006-ல் வெளியான ‘ஹூட்' படத்தில் இவரது நடிப்பு பெரிய கவனத்தைப் பெற்றது.

தொடர்ந்து ‘க்ரீன்பெர்க்' (2010), 21 ‘ஜம்ப் ஸ்ட்ரீட்' (2012) உள்ளிட்ட படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். ஆனால் அவரது நடிப்புக்குத் தீனி போட்ட படமாக ‘ஷார்ட் டேர்ம் 12’ அமைந்தது. அந்தப் படத்தில் அவர் விமர்சகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். இந்தப் பயணத்தில் முத்திரை பதிக்கும் வகையில் அமைந்துவிட்டது ரூம் திரைப்படம். சிறிய அறையில் வாழும் கதாபாத்திரத்தில் நடித்தபோதும் உலகம் முழுவதும் பேசப்படும் நடிகையாகிவிட்டார் லார்சன்.

Saturday, February 27, 2016

குங்பூ பாண்டா 3: கரடியின் தொடரும் அதிரடி!

(தி இந்துவில் 26.02.2016 அன்று வெளியானது)


‘குங்பூ பாண்டா’ அனிமேஷன் படம் 2008-ல் வெளியானது. உடல் பருத்த போ என்னும் பாண்டா கரடியின் வீர சாகச அட்டகாசம் உலகமெங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் வாரிக்குவித்தது. இதைத் தொடர்ந்து ‘குங்பூ பாண்டா-2’ திரைப்படம் 2012-ல் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த ‘குங்பூ பாண்டா’ வரிசைப் படங்களில் மூன்றாம் படமான ‘குங்பூ பாண்டா-3’ அமெரிக்காவிலும் சீனாவிலும் ஜனவரி 23 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதிலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ள விலங்குகளின் சாகசக் காட்சிகள் நம்ப முடியாத வகையிலான அதிசய உலகத்தை நமது கண் முன்னே கொண்டுவருகின்றன. ஜனவரி 19 அன்று வெளியான இந்தப் படத்தின் டிரெயிலரே நம்மை மெய்மறக்கச் செய்கிறது. இதுவரை இந்த டிரெயிலரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவரக்கூடிய வகையிலேயே இந்த ‘குங்பூ பாண்டா’ படமும் இருக்கிறது. ஜோனாதன் ராபர்ட் எய்பெல், கிளன் பெர்கர் ஆகியோர் திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை ஜெனிபர் யூ நெல்சன் அலெஸாண்ட்ரோ கர்லானி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். ‘குங்பூ பாண்டா-3’ படத்துக்கு ஜேக் ப்ளாக், ப்ரயான் க்ரான்ஸ்டன், டஸ்டின் காஃப்மேன் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

தன் இனத்தில் தான்தான் கடைசி வாரிசு என நம்பும் பாண்டா கரடியான போ, தன் தந்தையைக் கண்டுபிடிக்கிறது. பாண்டாவின் பூர்விகக் கிராமத்துக்குப் போவை அழைத்துச் செல்கிறார் தந்தை. அப்போது போவும் அதன் நண்பர்களும் பாதுகாத்துவந்த அமைதிப் பள்ளத்தாக்கு, எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறது. தப்பிப் பிழைத்த போர் வீரர்கள் போவைத் தேடிச் செல்கிறார்கள் என்று போகிறது கதை.

ஏற்கெனவே வெளியான ‘குங்பூ பாண்டா’ படங்களைப் போலவே இந்தப் படமும் முழுப் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். 145 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கலக்கலான கிராஃபிக்ஸ் காட்சிகளை 3 டி எஃபக்டில் உருவாக்கியிருக்கிறார்கள். ட்ரீம்வொர்க்ஸ் அனிமேஷன் நிறுவனமும், ஓரியண்டல் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றன. ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் படத்தை விநியோகிக்கிறது. இந்தியாவில் இந்தப் படம் மார்ச் 10 அன்று வெளியாகவிருக்கிறது. அனிமேஷன் பட ரசிகர்கள் தவறவிட மாட்டார்கள் என்பதை ட்ரைலரே உறுதிசெய்கிறது.

Monday, February 22, 2016

இடமோ சிறுசு, இல்லமோ பெருசு

(2016 பிப்ரவரி 21 அன்று தி இந்துவில் வெளியானது)


நகரத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோரின் பிரச்சினை வீடு சார்ந்ததாகவே இருக்கிறது. வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை வாடகையாகக் கொடுத்தும் நிம்மதியாக வசிக்க வழியில்லை என்ற வருத்தத்தைப் பலரும் வெளிப்படுத்துகிறார்கள். புறாக் கூண்டு போன்ற அபார்ட்மெண்ட்களை விலை கொடுத்து வாங்குவதே பெரும் போராட்டமாக இருக்கிறதே என்ற முணுமுணுப்புகள் எழுந்துகொண்டேயிருக்கின்றன. குறைந்த இடத்தில் பார்ப்பதற்கும் வசிப்பதற்கும் போதுமான அளவில் வீடு கிடைத்தால் பெரிய வரம் என்ற நினைப்பு எழாதவர்கள் இருக்க இயலாது. இந்த எதிர்பார்ப்பை உணர்ந்து கட்டுநர்களும் முடிந்த அளவில் குறைந்த இடத்தில் போதுமான வசதியை அளிக்க முயன்றுவருகிறார்கள். ஆனால் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அவ்வளவு எளிதில் பூர்த்திசெய்துவிட முடியாது.

உலகமெங்கிலும் நகரப் பகுதியில் குறைந்த இடத்தில் வசதியான வீடு என்னும் தேவை பெருகிக்கொண்டே இருக்கிறது. வீட்டுத் திட்டங்களை வடிவமைக்கும் வடிவமைப்பாளர்களும் தங்கள் அறிவைக் கூர்தீட்டி புதுமையான முறையில் நவீனமாக வீடுகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறார்கள். ரஷ்யாவைச் சேர்ந்த கான்ஸ்டண்டின் எண்டலேசிவ் என்னும் விஷுவலைஸர் வீட்டின் உள்ளலங்காரத்தில் புதுமையான உத்திகளைப் பிரயோகித்துவருகிறார். 400 சதுர மீட்டர் பரப்புக்குள் அடங்கும் வீடுகளையே மிகவும் விசாலமானதாகக் காட்டும் வகையில் அமைத்துவிடுகிறார் அவர்.

அவர் கட்டிய மொத்தமே 344 சதுர அடி பரப்பு கொண்ட ஒரு வீட்டில் ஹாலிலேயே படுக்கையறை அமைந்திருக்கிறது. ஆனால் படுக்கையறைக்குக் கண்ணாடிச் சுவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். பார்ப்பதற்கு அது தனியான அறையாகத் தெரியாமல் ஒட்டுமொத்தமாகப் பெரிய அறையாகத் தெரியும். ஆனால் படுக்கையறையும் தனியாக அமைந்திருக்கும். சிறிய உத்திதான் ஆனால் நம் கண்ணே நம்மை ஏமாற்றிவிடும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக அதை அமைத்துவிடுகிறார்.

வசீகரமான இரண்டு நாற்காலிகள் ஒரு சிறிய டைனிங் டேபிள் ஆகியவற்றைப் போட்டு மனங்கவரும் ஒரு டைனிங் ஏரியாவை உருவாக்கிவிடுகிறார். அந்த டைனிங் அமைப்பே விருந்தினர்களை எளிதாகக் கவர்ந்திழுத்துவிடும். மிகவும் ஒடுங்கிய சமையலறையில் இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி அவை மிகவும் திறந்தவெளியில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார். அதிக இடம் இல்லாவிட்டால்கூட சமையலறையில் ஒரு அமைதி எப்போதும் இருப்பது போன்று இது தோற்றம்கொள்கிறது.

மிகச் சிறிய குளியலறையில் அவர் வெள்ளை மார்பிள்களைக் கொண்டு இழைத்துவிடுகிறார். ஆகவே அந்தச் சிறிய குளியலறையே மிகவும் ஆடம்பரமான ஒன்றாக நம்மை எண்ணவைத்துவிடுகிறது. அந்தக் குளியலறையின் ஒரு மூலையில் செல்லம் போல் ஒரு ஷவர். அதைக் கண்ணாடிச் சுவர்களை வைத்து மறைத்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது அறைக் குளியலே ஆனந்தக் குளியலாகத் தோன்றிவிடும். அந்த அளவு வசீகரமாக அதை அமைத்திருக்கிறார். மிகவும் சிறிய இடம் என்பதால் அதை எளிதில் சுத்தப்படுத்தலாம். ஆக, குளியலறை எப்போதும் சுத்தமாகவும் அழகாகவும் காட்சி தரும்.

அடிப்படைத் திட்டத்தைப் பெரிதும் மாற்றாமல் அழகிய, ஆடம்பர, அறைக் கலன்களையும், சுவரின் வண்ணங்களையும் மாற்றி அல்ட்ரா மாடர்ன் தோற்றத்தில் மற்றொரு வீட்டையும் உருவாக்கியிருக்கிறார். அவரது செயல்திட்டம் ஒன்று தான். மிகச் சிறிய இடத்தில் கண்ணுக்கு அழகான வசிப்பதற்கு வாகான வீட்டை அமைக்க வேண்டும் என்பதுதான். குறைந்த இட வசதி வீடு எப்படிக் கட்டுவது என யோசிப்பவர்கள் இதைப் போன்ற நிபுணர்களின் உத்தியைப் பின்பற்றினால் சிறப்பான வீட்டை அமைத்துவிடலாம்.

Sunday, February 21, 2016

சேதுபதி

சேதுபதி (விஜய் சேதுபதி) நேர்மையான இன்ஸ்பெக்டர். அழகான மனைவி (ரம்யா நம்பீசன்) அன்பான குழந்தைகள் என சராசரியான குடும்பம் அவருடையது. அவரது காவல் நிலைய எல்லைக்குள் சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் சரமாரியாக வெட்டிக் கொளுத்தப்படுகிறார். இந்த வழக்கைத் துப்பு துலக்கும்போது அதன் பின்னணியில் வாத்தியார் என்ற பெரிய மனிதர் இருப்பது தெரியவருகிறது. வாத்தியாரின் குடும்ப பிரச்சினை காரணமாக அவருடைய மருமகனுக்குப் பதில் சுப்புராஜ் கொல்லப்பட்டதை சேதுபதி கண்டுபிடிக்கிறார். இது தொடர்பாக சேதுபதிக்கும் வாத்தியாருக்கும் மோதல் உருவாகிறது. இந்த மோதலின் காரணமாக சேதுபதி வேலையைத் தற்காலிகமாக இழக்கிறார். மீண்டும் சேதுபதி வேலையில் சேர்ந்தாரா, வாத்தியார்தான் வென்றாரா என்பதை விவரித்துச் செல்கிறது சேதுபதி.

சேதுபதி அடர்த்தியான முறுக்கு மீசையுடன் ஆண்மைமிக்க தோற்றம் காட்டி நேர்மைத் திமிர் கொண்ட போலீசாக வலம் வருகிறார். அடிக்கடி மீசையை வீரத்துடன் தடவிவிட்டுக்கொள்கிறார். குடும்பத்தில் மனைவியுடன் குறும்பில் ஈடுபட்டு குண்டாத்தி எனப் பிரியத்துடன் கொஞ்சும் ஆசைக் கணவனாகவும், குழந்தைகளுடன் சரிக்குச் சரி விளையாடும் பாசத் தந்தையாகவும் இருக்கும் விஜய் சேதுபதி  காவல் நிலையத்திலோ டெரரான இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அந்தந்த நேரத்தில் அந்தந்த மனிதராக மாறிவிடுகிறார். கணவனையும் குழந்தைகளையும் உலகமாகக் கருதும் சராசரியான நடுத்தரவர்க்க மனைவி வேடம் ரம்யா நம்பீசனுக்கு. அதில் அவர் அழகுடன் பொருந்திப்போகிறார். சின்ன சின்ன ஊடல் காட்டி வசீகரிக்கிறார்.

வாத்தியாராக வரும் வேல ராமமூர்த்தி ஊருக்குப் பெரிய மனிதர். ஆனால் தன் வழியில் யாராவது குறுக்கிட்டாலோ எந்த நிலைக்கும் கீழிறங்கி எதிரிகளைப் பந்தாடும் தாதாவாக வந்துசெல்கிறார்.

எந்தப் புதுமையும் இல்லாத பழைய கதை என்பதால் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகத் திரைக்கதையில் சில திருப்பங்களைச் சேர்த்திருக்கிறார்கள். அவற்றுக்குத் திரையரங்கில் பெரிய வரவேற்பும் கிடைக்கிறது. மிரட்டலான போலீஸ் அதிகாரியாக சேதுபதி அறிமுகமாகும் காட்சி, வாத்தியாரைப் பயமுறுத்தும் விதத்தில் வரும் சேதுபதி அவரை எதுவுமே செய்யாமல் விட்டுவிட்டுச் செல்லும் காட்சி, மேலும் விசாரணை கமிஷன் முன்பு காவலர் பொய் சொல்வதும் அதன் பின்னணிக் காட்சிகளும் ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தின் தேவையைப் பூர்த்திசெய்திருக்கிறது. ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங் திரைக்கதையில் வேகத்துக்கு உதவியுள்ளது. பல இடங்களில் காட்சிகளின் உணர்வை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பின்னணியிசை நெளியவைக்கிறது. மிரட்டலான போலீஸ் கதைப் படம் என்றாலும் இவ்வளவு பயங்கரமான இசையா என எண்ணவைக்கிறது. பாடல்கள் எவையும் படத்துடன் ஒன்றவேயில்லை. திரைக்கதையின் வேகத்துக்குத் தடையாகவே பாடல்கள் அமைந்துள்ளன. சேதுபதி வீட்டில் இல்லாத வேளையில் வாத்தியாரின் ஆட்கள் அவருடைய வீட்டுக்கு வந்து மிரட்டும் காட்சியில் சின்னப் பையன் துப்பாக்கியால் சுட்டு ஆட்கள் பயந்து ஓடுவது திரைக்கதையில் வித்தியாசமாக இருந்தாலும் நம்ப முடியவில்லை.

சேதுபதி சஸ்பெண்ட் ஆன பின்னர் கதையில் பெரிய சம்பவங்கள் எவையுமே இல்லை. சின்ன சின்ன திருப்பங்கள் மூலமாக மட்டும் கதை நகர்வதால் திரைக்கதை சிறிது தளர்ந்துவிடுகிறது. விசாரணை என்ற பெயரில் நான்கைந்து பேரை சேதுபதி சுட்டு வீழ்த்துவது கேள்விக்குள்ளாகவில்லை. ஆனால் அவரது காவல் நிலையத்தில் அவரது துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டால் மாணவன் காயம்படுவது அவ்வளவு பெரிய விஷயமாகிவிடுகிறது. இது திரைக்கதையில் பெரிய அபத்தம். மொத்தத்தில் இயக்குநர் அருண் குமாரின் சேதுபதி ரசிகர்களின் நினைவில் நிற்கும் போலீசாக இல்லை என்றாலும் சேதாரமில்லாமல் தப்பிவிட்டான்.