Sunday, May 18, 2014

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

(2014 மே 17 அன்று தி இந்துவில் வெளியானது)


அது 1981-ம் ஆண்டின் மே மாதம் 13-ம் நாள் அன்றைய மாலை நேரம். எல்லா நாளையும் போல் விடிந்த அந்த நாள் எல்லா நாளையும் போல் முடிந்திருக்க வேண்டிய தருணம் அது. ஆனால் அந்த நாள் அப்படி முடியாததால் வரலாற்றின் பக்கத்தில் முக்கிய நாளாகப் பதிவுசெய்யப்பட்டது. மாலை மயங்கி இருள் கவியத் தயாரான அந்த மாலைப் பொழுதில் போப் இரண்டாம் ஜான் பால் திறந்த வெளி ஜீப்பில் வாடிகன் சிடியில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார். போலந்து நாட்டைச் சேர்ந்த போப் 1978-ல்தான் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இத்தாலி நாட்டைச் சாராத முதல் போப் ஆண்டவர் அவரே. அவர் பெருந்திரளான தனது ஆதரவாளர்களது கூட்டத்தைக் கடந்துகொண்டிருந்தார். அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த அசம்பாவிதச் சம்பவம் நடந்தேறியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் தொடர்ந்து நான்கு துப்பாக்கிக் குண்டுகள் போப்பைக் குறிவைத்துப் பாய்ந்துவந்தன. இரண்டு குண்டுகள் வயிற்றின் கீழ்ப் பகுதியைத் துளைத்தன. ஒன்று இடது ஆட்காட்டி விரலையும் மற்றொன்று வலது தோளையும் பதம் பார்த்தன. ரத்த வெள்ளத்தில் மிதந்த போப் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் போப்பின் பாதுகாவலர்கள் இருவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

போப் மீது கொலை முயற்சி

போப் இரண்டாம் ஜான் பாலை 9மிமீ ப்ரௌனிங் ஹைபவர் செமி ஆட்டோமேடிக் பிஸ்டலால் சுட்டுக் கொல்ல முயன்றவர் பல்கேரிய நாட்டின் சோபியா பகுதியைச் சேர்ந்த மெஹ்மெட் அலி அஹ்கா என்பவர். இவர் தனது பெயரை மாற்றிக்கொண்டு பொய்யான பாஸ்போர்ட் உதவியுடன் 1981 ம் ஆண்டின் மே மாதம் 10 அன்று மிலன் நகரிலிருந்து ரயில் மூலம் ரோம் நகருக்குள் ஊடுருவியுள்ளார். துருக்கியைச் சேர்ந்த ஒருவரும் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இருவரும் இவருக்கு உதவியுள்ளனர். இத்தாலியில் இருந்த பல்கேரிய ராணுவ நிபுணரான ஸிலோ வாஸ்ஸிலேவ் என்பவரே திட்டத்தை அரங்கேற்றுவதற்கான கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். போப்பை மெஹ்மெட் சுட்டுக் கொன்றவுடன் ஓரல் செலிக் என்பவர் ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்வார். அப்போது உருவாகும் களேபரத்தின் நடுவே இருவரும் தப்பித்துவிட வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால் போப்பின் மீது குண்டு பாய்ந்ததை ஒட்டி ஏற்பட்ட பதற்றமான சூழலால் கவலை கொண்ட ஓரல் செலிக் பயந்து ஓடிவிட்டார். மெஹ்மெட் கூட்டத்தினிடையே தப்பிக்க வழியின்றி போலீஸாரிடம் மாட்டிக்கொண்டார்.

மன்னிப்பு தந்த மகான்

1981 ஜூலையில் மெஹ்மெட் அலி அஹ்காவுக்கு இத்தாலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சிறையிலிருந்த மெஹ்மெட்டை 1983-ல் போப் சென்று பார்த்துவந்தார். போப் மெஹ்மெட்டை மன்னித்து ஏற்றுக்கொண்டார். மெஹ்மெட்டின் குடும்பத்தினருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். மெஹ்மெட்டின் சகோதரரையும் தாயையும் சந்தித்துப் பேசினார். இந்த உறவால் போப் கேட்டுக்கொண்டதற்கிணங்க மெஹ்மெட் மன்னிக்கப்பட்டு 2000-வது ஆண்டில் துருக்கிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் 1979-ல் பத்திரிகையாளர் ஒருவரைக் கொல்ல முயன்ற வழக்கின் காரணமாகச் சிறையிலடைக்கப்பட்டார். இத்தாலியில் சிறையிலிருந்த நாட்களைக் கழிக்க மறுத்துவிட்டது துருக்கி நீதிமன்றம். எனவே சிறைத் தண்டனை தொடர்ந்தது. தண்டனை முடிந்த பின்னர் 2010-ம் ஆண்டு ஜனவர் 10-ல் தான் மெஹ்மெட் விடுதலையானார்.

போப் இரண்டாம் ஜான் பால் மீதான தாக்குதல் திட்டத்தின் மூளையாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பான கேஜிபி இருந்ததாகச் சொல்லப்பட்டது. போலந்து நாட்டின் கூட்டொற்றுமைக்குப் பாடுபட்ட இயக்கத்திற்கு போப் தெரிவித்த ஆதரவு காரணமாக அதிருப்தி அடைந்த ரஷ்யா, போப்பைக் கொல்லச் சதி செய்தது என்று கூறப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு டாம் க்ளன்ஸி என்னும் நாவலாசிரியர் ரெட் ரேப்பிட் என்னும் புதினத்தை எழுதியுள்ளார்; கரோல்: த போப், த மேன் என்னும் தொலைக் காட்சித் தொடரும் எடுக்கப்பட்டுள்ளது. எந்தப் போப்பைக் கொல்ல மெஹ்மெட் முன்வந்தாரோ அந்த போப் 2005-ல் உடல் நலமின்றி இருந்தபோது அவர் உயிர் பிழைக்க மனமுருக பிரார்த்தித்து அவரது உடல்நலம் சீராக வாழ்த்தி கடிதம் அனுப்பினாராம் மெஹ்மெட்.

Sunday, May 11, 2014

ஆடம்பர வீடுகளால் அதிரும் கட்டுமானத் துறை

(2014 மே 10 அன்று தி இந்துவில் வெளியானது)


சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தை பழமை விரும்பிகள் நிறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமான வீடுகளை விரும்புவோர்களும் மரபு சார்ந்த விஷயங்களின் மீது பிடிப்பு கொண்டோருமே சென்னையில் வீடு வாங்கிக் குடியேறுகிறார்கள் என்னும் நம்பிக்கை ரியல் எஸ்டேட் வட்டாரத்தில் இருந்துவருகிறது. ஆனால் சமீப காலமாக வீடுகளுக்கான சந்தையில் உருவாகிவரும் மாற்றங்கள் இந்த நம்பிக்கையைத் தகர்க்கின்றன.

முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் சென்னையில் ஏராளமான ஆடம்பர வீடுகளை உருவாக்கிவருகின்றன. அடையாறு, எழும்பூர், எம்.ஆர்.சி. நகர், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை போன்ற இடங்களில் கட்டப்பட்டுவரும் புதிய வீட்டுத் திட்டங்களே இதற்குச் சான்றுகள். இந்தத் திட்டங்களில் உருவாகிவரும் குடியிருப்புகளில் சுமார் ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. இங்கு ஒரு வீட்டின் விலை 5 முதல் 15 அல்லது 16 கோடி ரூபாய் வரை உள்ளது. இந்தத் திட்டங்களில் பெரும்பான்மையானவை வரவிருக்கும் மாதங்களில் பூர்த்திபெற்றுவிடும்.

இந்தத் திட்டங்கள் எல்லாம் நுகர்வோரால் எவ்வளவு விரும்பி வாங்கப்படும் என்பதைப் பொறுத்தே இவற்றின் வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள் கட்டுமானத் துறையைச் சேர்ந்த சிலர். சில திட்டங்கள் தொடங்கப்பட்டபோது ஓரளவு வாடிக்கையாளர்கள் வந்து தங்களுக்கான வீடுகளைப் பதிவுசெய்துள்ளனர். குடியிருப்புப் பகுதிகளை முற்றிலும் கட்டி முடித்துள்ள நிறுவனங்கள் அவற்றை வாடிக்கையாளர்களுக்குத் திறந்துவிடும் அதிருஷ்ட நேரத்திற்காகக் காத்திருக்கிறார்கள். நில உரிமையாளர்கள் சிலரும் இதைப் போன்ற குடியிருப்புகளைக் கட்டிவருகிறார்கள். முன்னணிக் கட்டுமான நிறுவனங்களும் இத்தகைய குடியிருப்புகளை உத்வேகத்துடன் உருவாக்கிவருகின்றன.

பெரும்பாலான திட்டங்களில் உருவாகும் வீடுகளை நுகர்வோர்கள் கடன் பயமின்றி வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமே. வழக்கமாகச் சென்னையில் தொழிலில் ஈடுபட்டு வரும் கட்டுமான அதிபர்கள் கூட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதையே வலியுறுத்துவார்கள். ஆனால் சமீபத்திய திட்டங்களில் ஈடுபட்டுவரும் நிறுவனங்கள் கணிசமான அளவில் தங்களைப் பணயம் வைத்து இந்தத் திட்டங்களை நிறைவேற்றிவருகின்றன. இதனால் கட்டுமானத் துறையைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தனிநபர்கள்கூடத் தங்களது நிலங்களில் சொந்தமாகக் குடியிருப்புத் திட்டங்களை, அதற்கான பிரத்தியேக திட்ட மேலாண்மைக் குழுவின் உதவியுடன் நிறைவேற்றுகிறார்கள். வீட்டுத் திட்டங்களின் தொடக்க செலவுக்கான நிதியைச் சம்பாதிப்பதற்காக நுகர்வோருக்கு நல்ல தள்ளுபடியை வழங்குகிறார்கள். தி.நகர் போன்ற பகுதிகளில் சில திட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு தனிநபர்களைத் துணிச்சலுடன் ரியல் எஸ்டேட் துறைக்குள் இறக்கியுள்ளது.

குடியிருப்புத் திட்டங்களை ஊக்குவிக்கக்கூடிய அளவுக்கு தியேட்டர்கள், வணிக வளாகங்கள் போன்றவை அமையாவிட்டால்கூட சில ஹோட்டல்கள் இத்தகைய திட்டங்களுக்கு அனுகூலமாய் அமைந்துள்ளன. ஆடம்பர வீடுகளை உருவாக்குவதில் வீட்டின் இண்டீரியரில் பொருத்தப்படும் அதிநவீன சாதனங்கள், குளியலறையின் நவீன வசதிகள், அலங்கார விளக்குகள் போன்றவையே சவாலாக இருக்கும் அம்சங்கள். கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கும்போது பார்த்தாலே பிரமிப்பை ஏற்படுத்தும் தோற்றத்தில் வீடு அமைவது அவசியம். ஆகவே வீட்டைப் பார்த்த உடன் இதற்குக் கோடி ரூபாய் கொடுக்கலாம் என்னும் எண்ணத்தை உருவாக்கும் இண்டீரியரைத் தர வேண்டும்.

இந்த ஆடம்பர வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுபவர்கள் கோடி கோடியாய்ச் சம்பாதிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களல்ல. நமது நாட்டிலேயே வசிக்கும் உயரதிகாரிகளும், பிரபலங்களும், தொழிலதிபர்களும்தான் இங்கு வீடுகளை வாங்கத் துடிக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான். ஆனால் இந்தத் திட்டங்களைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டார்களை அணுக எந்தத் தடையும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

Monday, April 21, 2014

தொங்கும் தூண் கொண்ட கோட்டை

(2014 ஏப்ரல் 20 அன்று தி இந்துவில் வெளியானது) 


வரலாற்றுப் பெருமையின் மௌன சாட்சியாக நிற்கிறது தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டை. ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த கடையெழு வள்ளல்களுள் ஒருவரான அதியமான்தான் இந்தக் கோட்டையை நிர்மாணித்தவர். வரலாற்றுச் சிறப்பு மிக்க தர்மபுரி மாவட்டம் சங்க காலத்தில் தகடூர் நாடு என அழைக்கப்பட்டுள்ளது. தகடூரை ஆண்ட அதியமான் மாபெரும் போர்வீரர். அதியமானின் சிறப்பைப் பாடி புலவர்கள் பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். இப்படி வந்த புலவர்களில் ஒருவர்தான் ஔவையார்.

தர்மபுரிதான் அதியமானின் தலைநகரமாக விளங்கியுள்ளது. மன்னர் அதியமானின் தலைமையிடமாக அதியமான் கோட்டை செயல்பட்டுள்ளது. தர்மபுரியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கும் எனத் தொல்லியலாளர்களும் வரலாற்றறிஞர்களும் தெரிவிக்கிறார்கள். இப்போது சில பகுதிகள் பழுதடைந்த நிலையில் உள்ள இந்தக் கோட்டை நீள்வட்ட வடிவத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது இந்தக் கோட்டையிலிருந்து பழைய நாணயங்கள் முதலானவை வெளியுலகிற்குத் தெரியவருகின்றனவாம். அதியமான் கோட்டைதான் தகடூர் நகரின் நுழைவாயிலாக இருந்திருக்க வேண்டும் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதியமான் கோட்டையின் நுழைவாயில் மிகப் பெரியதாக இருந்துள்ளது. கோட்டை மதிலில் எதிரிகள் ஏற முடியாதபடி மதிலின் வெளிப்புறச் சுவரில் கடுகு எண்ணெய்யைப் பூசியுள்ளார்கள். இந்தக் குறிப்புகள் எல்லாம் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் கோட்டைப் பகுதியில் உள்ள முக்கியக் கோவில் சோமேஸ்வரர் கோயில். இந்தக் கோயில் வெளிப்புறக் கல்சுவரில் யானை உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதுதான் அதியமானின் முத்திரை எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கோவில் தவிர, பைரவர், அங்காளம்மன், நரசிம்மர், காளியம்மன் ஆகிய கோவில்களும் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளன. இந்தக் கோட்டையில் படைவீரர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. கோட்டையின் மண்டபங்களில் மேற்புறச் சுவரில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கவனமின்றி சில ஓவியங்கள் மீது சுண்ணாம்பு பூசி அழிக்கப்பட்டுவிட்டன. இந்த ஓவியங்களில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்கள் தாம் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ஓவியங்கள் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்றறிஞர்கள் சொல்கிறார்கள்.

அதியமான் கோட்டையிலுள்ள மகா மண்டபத்தின் தொங்கும் கல்தூண்கள் கட்டடக் கலையின் அதிசயத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் இரண்டு டன்கள் எடை கொண்டவை. இவை தரையைத் தொட்டு நிற்கவில்லை. இந்தக் கோட்டை பழங்காலச் சின்னமாக இருப்பதால் அதியமான் கோட்டம் என்னும் பெயரில் இந்தக் கோட்டையைத் தமிழக அரசு பாதுகாக்கிறது. இந்தக் கோட்டத்தில் அதியமான், ஔவையார் ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

Sunday, April 13, 2014

குளு குளு மர வீடுகள்

(2014 ஏப்ரல் 12 அன்று தி இந்துவில் வெளியானது) 


நமது முன்னோர்கள் வீடுகளைப் பெரும்பாலும் களிமண், சுண்ணாம்பு, கல், மரம் போன்ற இயற்கையான பொருள்களைக் கொண்டே கட்டினார்கள். வெப்பமான நமது சூழலுக்கு ஏற்றவாறான வீடுகளைக் கட்டி அதில் தான் அவர்கள் வாழ்ந்துவந்தார்கள். வீடு கட்டவும் அலங்காரங்களுக்கும் மரங்களை அதிகமாகப் பயன்படுத்தினார்கள். மரப் பலகைகள் சூட்டைக் கடத்தாது, தடுத்துவிடும். எனவே அதிகமான சூடு வெளியில் இருந்தாலும் வீட்டின் உள்ளே வெப்பம் வராது. கோடைகாலத்தில் வீடு குளுகுளுவென்றிருக்கும், குளிர்காலத்திலோ கதகதப்பாக இருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் நமது வீட்டின் அமைப்பு மாறிவிட்டது. நவீனக் கட்டுமானப் பொருட்களும் பெருகிவிட்டன. அதிகப் பொருட்செலவில் முழுக்க சிமெண்டையும் இரும்பையும் கண்ணாடியையும் பயன்படுத்தி வீடுகளை உருவாக்குகிறோம். இதனால் வீடுகளில் மரங்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. பழைய வீடுகளின் கதவுகளையும் உத்திரங்களையும் நினைவுபடுத்திப் பாருங்கள். நவீன வீடுகளின் உருவாக்கத்தில் உபயோகமுள்ள மரத்தை மறந்துவிட்டோம். பசுமையான சூழலை வீட்டிற்குத் தரும் மரங்களை விட்டு விலகிவிட்டோம். ஆனால் பழைய வீடுகளைப் பார்க்கும்போது பலருக்கு ஏக்கமாக உள்ளது. கடந்த காலத்தை விட்டு நீண்ட தூரம் வந்துவிட்டாலும் அந்தப் பழங்கால உத்தியை இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வருகிறார் கட்டடக் கலை நிபுணர் ரவீந்திர குமார்.

இவர் பெங்களூருவில் உள்ள ப்ரகுருப் (Pragrup) என்னும் கட்டட நிறுவனத்தின் முதன்மை வடிவமைப்பாளர். மரத்தாலான வீடுகளை இவர் உருவாக்கிவருகிறார். மர வீடுகள் மட்டுமல்ல மரத்திலேயேகூட வீடு கட்டித் தருகிறார் ரவீந்திர குமார். உங்களுக்குத் துணிச்சலும் வித்தியாசமான விருப்பமும் இருந்தால் மரத்தின் மீது கட்டப்படும் வீட்டில் குடியிருக்கலாம். இது வரை சுமார் 20 மர வீடுகளை ரவீந்திர குமார் உருவாக்கியுள்ளார். இவை அனைத்துமே தனித்துவமானவை. ஒவ்வொன்றும் பிரத்தியேகமான வடிவமைப்பைக் கொண்டவை. ஆனால் அனைத்து வீடுகளுக்குமான பொதுவான அம்சங்கள் அவற்றின் அழகும் பசுமையான சூழலும்.

உங்களது சொந்த வீட்டை உருவாக்குங்கள் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே இவர் வீடுகளைக் கட்டுகிறார். இதனடிப்படையில் மரப் பலகைகளை வைத்துப் பண்ணை வீடுகள் போல் பசுமையான சூழலில் வீடுகளை அமைக்கும் முயற்சியில் இவர் ஈடுபடுகிறார். இவரது வீடுகளில் பாதங்கள் அதிகமாகத் தரையைத் தொட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் முழுக்க முழுக்க மரங்கள் தாம் வீட்டை ஆக்கிரமித்து நிற்கும். சுவர்கள், கூரைகள், தளங்கள் என அனைத்துமே ஏதாவது ஒரு மரத்திலிருந்து அறுக்கப்பட்ட பலகையாகவே இருக்கும். ரவீந்திர குமார் ஒரு வீட்டை மரத்தின் மீதே கட்டியுள்ளார். இந்த வீட்டை இவர் கமுகு மரத்தின் பட்டை, பழைய ரயில் தண்டவாளங்களை மறுசுழற்சி செய்து தயாரான இரும்புப் பட்டை ஆகியவற்றைக் கொண்டு கட்டினார். கமுகு மரத்திலிருந்து கிடைக்கும் பலகைகள் நீண்ட கால ஆயுள் கொண்டவையாம். இவை நூறு ஆண்டுகள் வரை கூட அப்படியே இருக்குமாம்.

இருபது வயது கொண்ட தூங்குமூஞ்சி மரத்தின் இரண்டு கிளைகளுக்கு மேலே இந்த மர வீடு தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது. அடி மரத்திலிருந்து பிரிந்து செல்லும் இரண்டு கிளைகள் தான் வீட்டைத் தாங்கிப் பிடித்து நிற்கின்றன. அந்தரத்தில் இருப்பது போல் தோற்றம் கொண்டாலும் மரம் வாயிலாக நிலத்தின்மீது நன்கு ஊன்றியபடி இந்த வீடு கம்பீரமாக நிற்கிறது. இதன் கதவுகள், சன்னல்கள், படிகள், அறைக்கலன்கள் அனைத்தும் மரத்தாலானவை. ஒருவேளை இயற்கைச் சீற்றத்தால் இந்த வீடு இடிந்துவிழுந்தாலும் இதன் பொருட்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக மட்கிவிடும் என்கிறார் ரவீந்திரா. இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. வீட்டின் கூரை மீது சுடு மண்ணாலான டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளன. இடவசதித் தேவைக்கேற்ப பக்கவாட்டில் நகரும் கதவுகளை அமைத்து அறைகளைப் பிரித்துள்ளார் ரவீந்திரா. மேற்கூரையில் புற்களை வேய்ந்துள்ளார்.

இந்த வீட்டின் வடிவம் பிரமிடைச் சாய்த்துவைத்தது போன்று உள்ளது. வீட்டின் சுவரைக் கல்லால் கட்டி யிருப்பதாலும் அதிகப்படியான மரத்தின் பயன்பாட்டாலும் பசுமையான உணர்வை இந்த வீடு அளிக்கிறது. வெளிப்புறச் சுவரின் மீது கமுகின் மேற்பட்டையை ஒட்டி அழகூட்டியிருப்பதால் பசுமை உணர்வு தூக்கலாகத் தெரிகிறது. குளுகுளு வீட்டை விரும்புவர்களின் மனதை விட்டு அகலாதவை இந்த மர வீடுகள்.

Tuesday, April 8, 2014

நோய்களை ஒழிக்க முடியுமா?

(2014 ஏப்ரல் 7 அன்று தி இந்துவில் வெளியானது)


தப்பித்தவறிக் கைபட்டாலே உயிரிழந்துவிடும் கொசுவால் ஆண்டுக்குப் பத்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொசுக்கடியால் பரவும் மலேரியா, டெங்கு போன்றவை நம்மை மட்டுமல்ல உலக நாடுகளையே பயமுறுத்திவருகின்றன. உலக சுகாதார நிறுவனம் இந்த நோய்களைத் தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இது 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ல் ஏற்படுத்தப்பட்டது. இந்த நாளை நினைவுகூரும் வகையில் 1950 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ல் உலக சுகாதார தினத்தை அந்நிறுவனம் கொண்டாடிவருகிறது.

உலக சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குவதே உலக சுகாதார நாளின் முதன்மை நோக்கம். ஒவ்வொரு வருடமும் ஒரு முழக்கத்தை முன்வைத்து இந்த நாளை உலக சுகாதார நிறுவனம் அனுசரிக்கிறது. இந்த ஆண்டு கொசுக்கடிக்கு எதிரான போராட்டமே முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே சிறிய கடி பெரிய அச்சுறுத்தல் என்னும் முழக்கத்தை அது முன்வைத்துள்ளது.

ஆண்டுதோறும் 100 கோடிப் பேர் கொசு, ஈ போன்றவை பரப்பும் மலேரியா, டெங்கு போன்ற நோய்களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சுமார் 250 கோடிக்கு மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். பெரும்பாலான குழந்தைகள் டெங்கு நோயால் எளிதில் தாக்கப்படுகின்றனர். சமீபத்தில் சீனா, போர்ச்சுகல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் போன்ற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் மலேரியா நோய் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பரவியுள்ளது.

போதுமான சுகாதார வசதியுடன் கூடிய குடியிருப்பு, குடி நீர் போன்ற வசதிகள் கிடைக்காத எளிய மக்களே இந்த வியாதிகளால் அதிகம் பாதிப்படைகிறார்கள். 21-ம் நூற்றாண்டில் ஒருவர்கூட கொசுக் கடியால் உயிரிழக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது. ஆரோக்கியமான இருப்பிடம், சுகாதாரமான குடிநீர் போன்றவை அனைவருக்கும் கிடைக்கும்போது இந்த நோய்கள் காணாமல் போய்விடும். அந்த நிலைமையைக் கொண்டுவரும் நோக்கத்தில் உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டுவருகிறது என்பதே நமக்கான ஆறுதல்.

Sunday, April 6, 2014

காற்றோட்டமான வீடு வாங்குகிறீர்களா?

(2014 ஏப்ரல் 5 அன்று தி இந்துவில் வெளியானது) 


வீடு என்பது வெறும் சொல்லல்ல. அது பலருக்குப் பெரும் கனவு. சம்பாத்தியமே போனாலும் கவலையில்லை நல்ல வீடு கிடைத்தால் போதும் என்பது தான் பலரது எதிர்பார்ப்பு. ஆக அப்படி ஒரு வீடு வாங்கும்போது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு வீடு போன்று மற்றொரு வீடு இருக்காது.

எல்லா வீடுகளும் ஒன்றுபோல் தோன்றினாலும் வெவ்வேறானவை. சில சமயங்களில் ஒரே மாதிரி தோன்றும் வீடுகளின் விலை வேறுபட்டிருக்கும். வீடு வாங்கும்போது அதிக விலை கொடுத்தாலும் சரியான வீட்டைத் தேர்ந்தெடுத்தால் நாம் கொஞ்சம் பணத்தைச் சேமிக்கலாம். விலை அதிகம் எனில் எப்படிச் சேமிப்பதாம் எனக் கேட்கிறீர்களா? வீடு வாங்கும்போது வீட்டின் உள்ளே நன்கு கவனித்துப் பாருங்கள். வீட்டின் வெளிப் புறத்தைப் போல் உள்புறமும் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருக்கிறதா எனச் சோதியுங்கள். வீட்டின் உள்ளே வெளிச்சமும் காற்றும் தேவையான அளவில் வருவதற்கு வசதியாக வீட்டின் உட்புறம் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.

அறைகளுக்கு அவசியமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமாக வாழ வீட்டிற்குள் சூரிய ஒளியும் சுத்தமான காற்றும் நிறைய வர வேண்டும். முறையான வெண்டிலேஷன் அமைந்துள்ள வீட்டில் அநாவசியமாக விளக்கெரிக்க வேண்டாம். குளிர்சாதன வசதியைத் தேவையின்றிப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் கோடையில் மட்டும் தான் அந்த வீட்டிற்கு ஏ.சி. தேவைப்படும். இரவில் மட்டும் தான் விளக்கு தேவைப்படும். தேவையான இடங்களில் தண்ணீர் கிடைக்குப் போதுமான குழாய் வசதி அமைந்திருக்க வேண்டும்.
மின் சாதனங்களுக்கு மின்சாரம் வழங்கப் போதுமான சுவிட்ச் போர்டுகளும் சுவிட்சுகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் வீட்டிற்குக் குடிபோகும் முன் கவனிக்கப்பட வேண்டியவை; இவற்றை எல்லாம் கவனிக்காமல் வீட்டிற்குக் குடிபோய்விட்டால் அதனால் அதிகச் சிரமம் ஏற்படும். நமக்குத் தேவையான விதத்தில் வீட்டை மாற்றியமைக்க நேரமும் பணமும் செலவாகும். இவை அநாவசிய விரயங்கள்.

பெரும்பாலும் வீட்டைத் தேர்வு செய்யும் முன்னர் தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளதா மார்பிள்ஸா கிரானைட்டா என்பதை எல்லாம் உடனே கவனித்துவிடுவோம். ஆனால் குளியலறையில் தேவையான வாஷ் பேசின் உள்ளதா என்பது போன்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் நன்றாக ஆராய்ந்துவிட்டே வீட்டை வாங்க வேண்டும். சில ஆயிரங்கள் குறைவு என்பதால் உட்புறம் முறையாக அமைக்கப்படாத வீட்டை வாங்குவது சரியல்ல. ஏனெனில் அவற்றைப் புதிதாக உருவாக்க அதிக செலவு பிடிக்கும் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். பலர் அவசரப்பட்டு வீட்டை வாங்கிவிட்டு உள் அலங்காரத்திற்கு அதிகச் செலவு செய்து அவதிப்படுவார்கள். அந்தத் தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள். வீடு என்பது நிம்மதிக்கானது. எனவே நிதானமாக வீடு வாங்கி நிம்மதியாகக் குடிபோங்கள்.

பேஸ்புக்கால் பிழைத்த உயிர்

(2014 ஏப்ரல் 5 அன்று தி இந்துவில் வெளியானது) 


சமூக வலைதலங்கள் பொழுதுபோக்காக மட்டுமே பயன்படுகிறது என்னும் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி சமூக வலைதலங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில நல்ல செயல்களிலும் ஈடுபடுகின்றன. சமீபத்தில் கேரளாவில் ஃபேஸ்புக் மூலமாக இளம்பெண் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் அகலி என்னும் இடத்தில் வசித்துவருபவர் ரபிதா சுனில் குமார். அவர் அகலியிலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளிகள். பிறந்ததிலிருந்தே அந்தப் பெண் இதய நோயால் அவதியுற்றுவருகிறார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் ரபீதா வகுப்பறையில் மிகவும் களைப்பாக இருந்திருக்கிறார்.

உடல்நிலை பாதிப்படைந்துள்ளதை உணர்ந்திருக்கிறார். எனவே அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரபீதாவை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய நோய் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு இருந்ததால் அவர் தேர்வெழுதச் சென்றுள்ளார். தேர்வு எழுத அவர் விரும்பினாலும் உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. கடும் வலி காரணமாக அவரால் தேர்வைச் சரியாக எழுத முடியவில்லை. பாதியிலேயே வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

அறுவைச் சிகிச்சை செய்தால் ஒழிய அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் அவரது பெற்றோர் அவரை அங்குள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதய நோய் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள இரண்டு லட்சம் ரூபாய் செலவாகுமென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சாதாரணக் கூலித் தொழிலாளர்களான அவருடைய பெற்றோருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. மகளின் உயிரைக் காப்பாற்ற அவ்வளவு பணமில்லை என்பதால் கவலையடைந்துள்ளனர்.

நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது ரபீதாவின் குடும்பம். குடும்ப நண்பர்கள் ஏதாவது நன்கொடை திரட்டலாம் என யோசனை தெரிவித்தனர், அதற்கும் முயன்றனர். ஆனால் நிலைமை அவர்களுக்குச் சாதகமாக இல்லை. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. குறுகிய காலத்தில் எப்படிப் பணத்தைப் புரட்டுவது என ரபீதாவின் பெற்றோர் கலங்கித் தவித்துப்போனார்கள்.

இப்படியான சமயத்தில் ரபீதாவுடன் படிக்கும் மாணவி ஒருவர் ரபீதாவின் நிலைமை பற்றி ஃபேஸ்புக்கில் சாயக்கடா என்னும் குழுவில் பதிவிட்டுள்ளார். அது வெறும் லைக்குகளும் கமெண்டுகளுமாகச் சாதாரணப் பதிவாக முடிந்துவிடவில்லை. அந்தப் பதிவுக்கு அதிகமான அளவில் ஆதரவு கிடைத்தது. அந்தக் குழுவின் உறுப்பினர்கள் தங்களது பங்காக ரூபாய் ஒரு லட்சத்து அறுபதாயிரத்தைத் திரட்டிக் கொடுத்துள்ளனர். எல்லோரும் அவர்களாக விரும்பி வந்து உதவினார்கள் என சாயக்கடா குழு உறுப்பினர்களில் ஒருவரான மினி ஸ்ரீனிவாசன் கூறுகிறார்..

இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல இஸ்ரேல், அங்கோலா போன்ற நாடுகளில் வசிக்கும் உறுப்பினர்கள் சிலரும் இந்த உதவியில் கைசேர்த்திருக்கிறார்கள். உண்மையில் இஸ்ரேலில் உள்ள ஒரு உறுப்பினர்தான் இந்த உதவிப் பயணத்தைத் தொடங்கிவைத்தார் என ரபீதாவின் அம்மா பிந்து சுனில்குமார் சொல்கிறார். அதனால்தான் எங்களை மலைக்கவைத்த தொகையை ஒரு வாரத்திற்குள் புரட்ட முடிந்தது என்றும் அவர் சந்தோஷப்படுகிறார்.

ரபீதாவின் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது. ரபீதாவுக்குத் தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துவிட்டனர். ரபீதா மெல்ல மெல்ல இயல்பான நிலைக்குத் திரும்பிவருகிறாள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரபீதா மீண்டும் துள்ளித் திரியும் காலம் தொடங்கிவிட்டது.

Sunday, March 30, 2014

கண்ணோடு காண்பதெல்லாம்

(2014 மார்ச் 29 அன்று தி இந்துவில் வெளியானது)


பறப்பதற்கும் தண்ணீரில் நடப்பதற்கும் எல்லோருக்கும் ஆசை தான். ஆசை இருந்தாலும் அதைச் செயல்படுத்த எல்லோராலும் முடியாதே. ஒருசிலரால் தான் அற்புதங்களை நிகழ்த்த முடிகிறது. அப்படியொருவர் 2011 ஜூன் 25 அன்று லண்டன் தேம்ஸ் நதியின் மீது நடந்து சென்று மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். அவர் டைனமோ என்னும் புகழ்பெற்ற மாஜிக் நிபுணர். இதைப் போல மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார். ஒரு முறை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள உயரமான டைம்ஸ் கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவரில் நடந்தே தரைக்கு இறங்கியுள்ளார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் டபுள் டக்கர் பஸ்ஸின் கூரை மீது தரையிலிருந்து 15 அடி உயரம் - வலது கையைத் தொட்டபடி உடல் முழுவதையும் அந்தரத்தில் தொங்கவிட்டுவந்தார். கண்ணாடி வழியே ஊடுருவுவார். விரலைக் கையிலிருந்து ஒடித்து மீண்டும் பொருத்துவார். இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகளே.

சாதாரண மனிதன் நினைத்தே பார்க்க முடியாத சாகசச் செயல்களை அநாயாசமாகச் செய்து காட்டியுள்ளார் டைனமோ. ஹிஸ்டரி சேனலில் ஒளிபரப்பான இவரது மேஜிசியன் இம்பாஸிபிள் நிகழ்ச்சியை 24 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதற்குச் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி விருதும் இருமுறை கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி டிவிடி வடிவில் விற்பனையானபோதும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இவையெல்லாம் இவரது திறமைக்குச் சான்றுகள்.

ரசிகர்களால் டைனமோ என அழைக்கப்படும் ஸ்டீவன் பிரேய்ன் இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டில் 1982இல் பிறந்திருக்கிறார். இவரது தந்தை அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றுவிடுவாராம். எனவே தாயின் பராமரிப்பில்தான் வளர்ந்துவந்திருக்கிறார். தந்தையின் இடத்தில் இருந்து இவரைப் பார்த்துக்கொண்டவர் இவருடைய தாத்தாவான கென். இவர்தான் டைனமோவின் ரோல் மாடல். இவரும் சிறு அளவிலான மந்திர தந்திர வித்தைகளில் ஈடுபட்டவர். இவரிடமிருந்து தான் மாயாஜால வித்தைகளை டைனமோ கற்றுக்கொண்டுள்ளார்.

2012இல் தாத்தா காலமானது தனது வாழ்வின் பெருந்துக்கம் என்கிறார் டைனமோ. தொடக்க காலத்தில் ஸ்டீவன் சீட்டுக் கட்டுகளை வைத்துப் பல தந்திர விளையாட்டுகளில் ஈடுபட்டுப் பார்ப்போரைக் கவர்ந்திருக்கிறார். இவருக்குப் பிடித்த கதாநாயகப் பாத்திரங்களில் ஒன்று சூப்பர் மேன். சூப்பர் மேனின் சாகசங்கள் எல்லாம் உண்மையானவை என நம்பியுள்ளார் இவர். டைனமோ என்ற பிரபலமான மாஜிக் நிபுணரானபோது தன்னையும் சூப்பர் மேன் போல் நினைத்துக்கொண்டே தந்திர நிகழ்ச்சிகள் ஈடுபட்டதாக இவர் சொல்கிறார்.

டீன் ஏஜில் ஏற்பட்ட குடல் அழற்சி நோயின் பாதிப்பையும் மீறி ரசிகர்கள் தந்த உற்சாகத்தால் தொடர்ந்து சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார் டைனமோ. சாதாரணமாக வீதியில் மாயாஜால நிகழ்ச்சிகளை நடத்திவந்த இவருக்கு இப்போது உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

Saturday, March 29, 2014

அறுசுவைக் கலைஞன்

பிரகாஷ் ராஜின் பிறந்தநாளுக்காக (மார்ச் 26) எழுதப்பட்ட கட்டுரை. இதன் எடிட் செய்யப்பட்ட பிரதி 2014 மார்ச் 28 அன்று தி இந்துவில் வெளியானது.)


பாலசந்தரின் மோதிர விரலால் குட்டுப்பட்டவர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ். 1965 மார்ச் 26 அன்று பிறந்த பிரகாஷ் ராஜ் பாலசந்தரின் டூயட் படத்தின் விறுவிறுப்பான வில்லனாக அறிமுகமானார். பிரத்யேக உடல்மொழி, வனங்களை உச்சரிக்கும் பாணியில் தனித்துவம் என எளிதாக ரசிகர்களை வசீகரித்தார் பிரகாஷ் ராஜ். ஏற்கனவே கன்னடத்தில் நாடகங்களில் நடித்திருந்த அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. தமிழ்த் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான பின்னர் 1995இல் கையளவு மனசு என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடித்ததால் தமிழ்க் குடும்பங்களுக்குப் பரிச்சயமான நடிகராக அவர் மாற முடிந்தது. 1995-96களில் வெளியான ஆசை, கல்கி ஆகிய திரைப்படங்கள் மூலமாக பிரகாஷ் ராஜ் முன்னணிக்கு வந்தார். வில்லனாக நடித்தாலும் கதாநாயகனுக்குச் சமமான வரவேற்பையும் பெற்றார். ரஜினிகாந்த், சத்யராஜ், ரகுவரன் ஆகிய நடிகர்கள் வரிசையில் பிரகாஷ் ராஜுக்கு முக்கிய இடம் கிடைத்தது. 

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் இரண்டு கதாநாயகர்களுள் ஒருவராக பிரகாஷ் தோன்றினார். திராவிட அரசியலில் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் உறவைச் சித்திரிந்திருந்த அந்தப் படத்தில் திமுக தலைவர் கருணாநிதி வேடமேற்றிருந்தார் பிரகாஷ் ராஜ். அந்தப் படம் வசூல்ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் பிரகாஷ் ராஜின் நடிப்புத்திறனுக்குச் சாட்சியாக இருந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என படு பிஸியான நடிகராக வலம் வந்தார் பிரகாஷ்.

வஸந்தின் அப்பு திரைப்படத்தில் அரவாணி வேடம் ஏற்று நடித்தார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடமேற்ற நடிக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் இவரது நடிப்பு ஒரே பாணியில் தான் அமைந்துள்ளது என விமர்சனமும் உண்டு. சைக்கோத்தனம், நக்கல் நையாண்டி வசனம் இரண்டையும் கலந்து தனது கதாபாத்திரங்களுக்கு புது வடிவம் கொடுத்தார் பிரகாஷ் ராஜ். கில்லி படத்தில் இவரது உச்சரிப்பில் வெளியான செல்லம்… என்னும் வசனம் ரசிகர்களால் அடிக்கடி நினைவுகூரப்படுகிறது. வில்லனாக அறிமுகமானாலும் குணச்சித்திர வேடங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். வித்தியாசமான படங்களைத் தர வேண்டும் என்னும் விருப்பத்தால் தானே தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் போன்ற படங்களை அதன் காரணமாகவே உருவாக்கினார். திரைப்படம் மீது கொண்ட தாகத்தால் தோனி என்னும் திரைப்படத்தை இயக்கி நடித்தார். பூலோகம், மத கஜ ராஜா, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளன.

Tuesday, March 25, 2014

ஓரம்போ ஓரம்போ...

(தி இந்துவில் 2014 மார்ச் 24 அன்று வெளியானது)


சைக்கிள் நமது வாழ்க்கையோடு வாழ்க்கையாகப் பின்னிப்பிணைந்த வாகனம். சைக்கிளைப் பயன்படுத்துபவர்களில் 25 சதவிகிதத்தினர் வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரப் பயணத்திற்கே அதைப் பயன்படுத்துகிறார்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது. வாரத்திற்கு 3 மணி நேரமோ 30 கிலோ மீட்டரோ சைக்கிள் பயணம் மேற்கொண்டால் இதயம் தொடர்பான வியாதிகளைத் தள்ளிவைக்கலாம் என நிபுணர்கள் சொல்கிறார்கள். உலகத்தில் சுமார் 100 கோடி சைக்கிள்கள் சாலையில் பயணிக்கின்றன என்றும் ஆண்டுதோறும் 10 கோடி சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சைக்கிளைக் கண்டுபிடிக்கும் முயற்சி நீண்ட காலத்திற்கு முன்னரே தொடங்கியுள்ளது.

கிபி 1490இலேயே லியானார்டோ டாவின்ஸி ஏறக்குறைய சைக்கிள் மாதிரியான ஒரு வாகனத்தை வரைந்திருக்கிறார். ஆனால் சைக்கிளை முதலில் டி சிவ்ராக் என்னும் பிரெஞ்சுக்காரர் கிபி 1790இல் வடிவமைத்துள்ளார். இதில் பெடலோ ஸ்டியரிங்கோ கிடையாது. ஆனால் பார்ப்பதற்கு சைக்கிள் போலவே இருந்துள்ளது. இதைவிட மேம்பட்ட சைக்கிளை 1817இல் கார்ல் வான் ட்ரைஸ் என்னும் ஜெர்மன் பிரபு உருவாக்கியுள்ளார். இதிலும் பெடல் கிடையாது. கால்களைத் தரையில் ஊன்றித்தான் இழுத்துச் சென்றுள்ளார்கள். இதற்கு டிரைசைன் (Draisine) எனப் பெயர். இந்த வாகனத்தை 1818ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று இவர் பாரிசில் காட்சிக்கு வைத்துள்ளார். இந்த இருசக்கர வாகனம் தான் சைக்கிளை உருவாக்கச் சரியான வழியைக் காட்டியுள்ளது.

இதன் பின்னர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் 1839இல் நவீன சைக்கிளை வடிவமைத்துள்ளார். இந்த உருவாக்கமும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. சைக்கிள் உருவாக்குற முயற்சிக்கிடையில் பைசைக்கிள் என்னும் சொல் பிரான்ஸில் 1860இல தான் புழக்கத்திற்கு வந்துள்ளது. 

மேக்மில்லனைத் தொடர்ந்து 1863இல் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கொல்லரான எர்னஸ்ட் மிச்சௌ என்பவர் இரும்புச் சட்டம், மரத்தாலான சக்கரம் கொண்ட, ஓட்டுவதற்கு எளிதான சைக்கிளைத் தயாரித்துள்ளார். இவர் 1866இல் தொடக்ககால சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தையும் அமைத்துள்ளார். மரச் சக்கரத்திற்குப் பதில் கெட்டியான ரப்பர் டயர் பயன்படுத்தப்பட்ட சைக்கிள் 1869இல் உருவாகியுள்ளது. ஆனால் காற்றடைத்த டயரை 1889இல்தான் உருவாக்கியுள்ளனர். சைக்கிள் வடிவம் ஓரளவு முழுமையான பின்னர் 1884இல் ஜே.கே.ஸ்டார்லி என்பவர் பாதுகாப்பான சைக்கிளை உருவாக்கியுள்ளார். 1962இல் நவீன சைக்கிள் பெருகத் தொடங்கியுள்ளது. இப்போது மின்சக்தி மூலமா இயங்குகிற சைக்கிள்கள் சந்தையில் கிடைக்கின்றன.


குறிப்பிட்ட தூரத்தைக் காரில் கடப்பதற்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனில் பாதியிருந்தால் போதும் அதே தூரத்தை சைக்கிளில் கடந்துவிடலாம். அது மட்டுமல்ல சைக்கிள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனம். ஒரு கார் நிறுத்தும் இடத்தில் சுமார் 15 சைக்கிள்களை நிறுத்திவிடலாம். சைக்கிளில் செல்ல நாமெல்லாம் ஹெல்மட் அணிவதில்லை. ஆனால் ஆஸ்திரேலியா நாட்டில் சைக்கிளில் ஹெல்மட் அணிந்து செல்வதை 1991இல் சட்டமியற்றி அமல்படுத்தியுள்ளது.

கிரேக்க நாட்டுத் தலைநகர் ஏதன்ஸின் பிரெட் பிர்ச்மோர் என்னும் சாதனையாளர் 1935இல் சைக்கிளிலேயே உலகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் மைல்கள் சுற்றி வந்துள்ளார். இதில் 25 ஆயிரம் மைல்கள் தூரத்தை சைக்கிள் பெடலை மிதித்தே கடந்துள்ளார். எஞ்சிய தூரம் படகுப் பயணம். டூர் த பிரான்ஸ் என்பது ஆண்டுதோறும் பிரான்ஸில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சைக்கிள் பந்தயம். 1903இல் ஒரு பத்திரிகை விற்பனையை அதிகரிக்கும் உத்தியாகத்தான் இந்த சைக்கிள் பந்தயம் தொடங்கியுள்ளது.

Saturday, March 22, 2014

காமெடியேதான் வேணுமா?

(தி இந்துவில் 2014 மார்ச் 21 அன்று வெளியானது)


தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் வசூலை வாரிக் குவித்த படங்கள் கரகாட்டக்காரனும் சின்ன தம்பியும். இரண்டிலும் இசையும் நகைச்சுவையும் முக்கியப் பங்கு வகித்தன. இரண்டுமே கவுண்டமணி நடித்த படங்கள். 75 வயது நிறையும் கவுண்டமணி 700க்கும் மேற்பட்ட படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைத் தன்பால் ஈர்த்தவர். ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக அவ்வளவாக நடிப்பதில்லை என்றாலும் யுடியூபிலும் தொலைக் காட்சி சேனல்களிலும் அதிகம் பார்க்கப்படும் நகைச்சுவைக் காட்சிகளின் நாயகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டைக்கு அருகே உள்ள வல்லக்குண்டாபுரத்தைச் சேர்ந்த கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணி. சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்படி நடித்த ஒரு நாடகத்தில் கவுண்டர் என்னும் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இதனால் 16 வயதினிலே படத்தில் இவரை அறிமுகப்படுத்தியபோது இயக்குநர் பாரதிராஜா சுப்பிரமணியைக் கவுண்டமணி ஆக்கிவிட்டார். கதாநாயகர்களுடன் மட்டுமே அடையாளம் காணப்படும் முத்திரை வசனங்களைக் கவுண்டமணி தன் பாணியில் காமெடி ரசத்துடன் பேசித் திரையரங்குகளை அதிரவைத்தார். அறிமுகப் படத்திலேயே ‘பத்த வச்சிட்டயே பரட்ட’ என்னும் பஞ்ச் வசனம் கவுண்டமணியை அடையாளம் காட்டியது. வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் ‘பெட்ரோ மாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’, சூரியன் படத்தின் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ போன்ற வசனங்கள் பல்வேறு தருணங்களில் அன்றாட வாழ்வில் மக்களால் நினைவுகூரப்படுகின்றன.

கவுண்டமணி செந்தில் ஜோடியினர் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். இவர் சத்யராஜுடன் ஜோடி சேர்ந்து நடித்த படங்களும் ரசிகர்களைச் சிரிக்கவைத்தன. நடிகன், பிரம்மா, ரிக்‌ஷா மாமா, தாய்மாமன், மாமன் மகள் போன்ற படங்களின் காமெடி காட்சிகள் எப்போது பார்த்தாலும் பெரும் சிரிப்பை எழுப்ப வல்லவை. ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய படங்களாலான நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் போன்றவற்றில் கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் விரும்பப்படுகின்றன. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களுடன் நடித்த காட்சிகளிலும் கவுண்டமணி தனக்குரிய ஆளுமையை விட்டுக்கொடுத்ததில்லை. மன்னன், உழைப்பாளி ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தைச் சர்வ சாதாரணமாக முந்திச் செல்வார் கவுண்டமணி. விஜயசாந்தி முன்பு திரையரங்க மேடையில் ரஜினிகாந்த் உடைந்த கண்ணாடியுடன் தோன்றும் காட்சியில் ரஜினியைக் கிண்டல் செய்ய வேறு நகைச்சுவை நடிகர்களால் முடிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே.

இயக்குநர் மணிரத்னத்தின் பகல் நிலவு, இதயக்கோவில் ஆகிய படங்களிலும் ஷங்கரின் ஜெண்டில்மேன் படத்திலும் கவுண்டமணிதான் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். சக நடிகர்கள் வெளிப்படுத்தும் வசனங்களுக்கு இயல்பான எதிர் வசனங்கள் பேசுவதில் கவுண்டர் மன்னர். சில சமயங்களில் அது மிகவும் சாதாரணமான வசனமாகவும் இருக்கும். ஆனால் சிரிப்புக்கு உத்தரவாதம் இருக்கும். உதயகீதம் படத்தில், செந்தில் “அண்ணே, நீங்க அறிவுக் கொழுந்துண்ணேன்” என்பார். பதிலாக கவுண்டமணி “கிள்ளி வாயில போட்டுக்கோடா” என்பார். இயக்குநர் மணிவண்ணன் நகைச்சுவைப் பாத்திரங்களில் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியதும் கவுண்டமணியின் நகைச்சுவைப் படங்கள் குறையத் தொடங்கியதும் ஒருசேர நடந்தன. கவுண்டமணி சக்கை போடு போட்ட காலத்தில் சக நடிகர்களை அடிப்பதும், உடல் உருவத்தின் அடிப்படையில் நாகரிகமற்றுக் கிண்டல் செய்வதும் காமெடியா என்ற விமர்சனம் எழுந்தது. ஆனாலும் கவுண்டமணியின் ரசிகர்கள் எண்ணிக்கை குறையவில்லை.

நகைச்சுவைப் பாத்திரங்களில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் தனது பங்களிப்பை முழுமையாகச் செலுத்திவருகிறார் கவுண்டமணி. இடையில் சில வருட ஓய்வுக்குப் பின்பு மீண்டும் வாய்மை, 49 ஓ ஆகிய படங்களில் தற்போது நடித்துவருகிறார். இதில் 49 ஓ படத்தின் கதாநாயகனே கவுண்ட மணிதான். ஏற்கனவே பணம் பத்தும் செய்யும், ராஜா எங்க ராஜா, பிறந்தேன் வளர்ந்தேன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் கவுண்ட மணி கதாநாயகனாக நடித்துள்ளார். கவுண்டமணி தான் ஒரு திரைப்பட நடிகர் என்பதில் தெளிவாக இருக்கிறார். தன்னைப் பார்க்க வேண்டுமானால் ரசிகர்கள் திரையரங்கிற்குத்தான் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அநாவசியமாகப் பிற ஊடகங்களில் அவர் தலைகாட்டுவதில்லை. தொலைக்காட்சிகளிலோ கலை நிகழ்ச்சிகளிலோ கவுண்டமணியைப் பார்க்க முடியாது. நகைச்சுவையைப் போலவே இதிலும் அவரது பாணி தனிப் பாணிதான்.

Tuesday, March 18, 2014

படச்சுருளுக்கு ஓர் இரங்கற்பா

(இது எனது மொழிபெயர்ப்பு கட்டுரை. தி இந்துவுக்காக செய்த முதல் மொழிபெயர்ப்பு தி இந்து நாளிதழில் 2014 மார்ச் 17 அன்று வெளியானது.)


ஒளிப்பதிவு செய்யப்பட்ட படச்சுருளைத் திரையில் ஓடும் வகையில் புராஸஸிங் செய்து வந்தது பிரசாத் பிலிம் லேபரட்டரி. இந்தியாவில் படச்சுருள் படங்களுக்கான காலம் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து இது மூடப்பட்டது. சினிமா தொடங்கிய காலம் முதல் இருந்துவந்த பழக்கம் மாறியதால் இதுவரையான ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய வாழ்வின் பாதையும் மாறிவிட்டது.

சமீப காலமாக டிஜிட்டல் திரைப்படங் கள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவின் பெரிய பிலிம் லேபரட்டரியான பிரசாத் கலர் லேப் தனது இயக்கத்தைக் கொஞ்சம் கொஞ் சமாக நிறுத்தத் தொடங்கியபோது பிலிமில் படமெடுக்கும் காலம் முடிவுக்கு வருகிறது என்னும் யதார்த்தம் நம்மைத் தாக்கியது. படச்சுருளை கேமராவில் மாட்டிப் படப்பிடிப்புக்குச் சென்று படமாக்குவார்கள். பின்னர் லேபில், கையுறை அணிந்த கைகளால் அந்தச் சுருளைக் கழுவி நெகட்டிவாகவும் பாஸிட்டிவாகவும் மாற்றுவார்கள். படச்சுருளைத் தனித்தனி காட்சிப் பிம்பங்களாக வெட்டுவார்கள். தேவையான காட்சிக் கோவையை உருவாக்குவார்கள். லேபின் இருட்டறைக் கொடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிம்பங்கள் அடங்கிய சுருள் ஒரு புறம் தொங்கிக் கொண்டிருக்கும். மறுபுறம் தேவையற்ற பிழையான பிம்பங்கள் அடங்கிய படச்சுருள் கிடக்கும். பின்னர் படச்சுருளில் ஒலி ஏற்றப்படும். தேவையான வண்ண மாற்ற வேலையும் நடைபெறும். இறுதி யாகத் திரையிடும் நிலையிலான படச்சுருள்கள் ரீல் பெட்டியில் அடுக்கப் பட்டுத் திரையரங்குக்கு அனுப்பப்படும். சுருண்டு கிடந்த படச்சுருள் புரொஜக்டரின் வழியே நொடிக்கு 24 பிம்பங்களாக ஓடும்போது கண்ணெதிரே திரையில் சினிமா எனும் மாயலோகம் பரவும். படச்சுருளில் சினிமா உருவாக்கப்பட்ட இந்த நூறாண்டுக் கதை முடிவுக்கு வரும் காட்சியின் பிம்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்ணிலிருந்து மறைந்து ஞாபக அடுக்குகளில் தங்கத் தொடங்கின.

இதற்கெல்லாம் மேலாகப் படச் சுருளைக் கைகளால் தொடும்போது கிடைத்த அந்த ஸ்பரிசம், நாசி உணர்ந்த மணம் இவையெல்லாம் நினைவிலிருந்து அகலாது. இப்படிப் படச்சுருள் களோடும் திரைப்படத்தோடும் ஒட்டி உறவாடியவர்களின் வாழ்க்கையை டிஜிட்டல் சினிமா மாற்றிவிட்டது. படச்சுருளின் ரூபத்தை டிஜிட்டல் தொழில்நுட்பம் அழித்துவிட்டது. இது தனிப்பட்ட இழப்பு அல்ல. “உண்மையிலேயே நீங்கள் அற்புதமான சில்வர் ஹேலைட் பிம்பங்களை இழந்து விட்டீர்கள், அவற்றின் தோற்றம், மதிப்பு மிக்க வண்ணக் கலவை, அவை உருவாக்கிய உணர்வு ஆகியவற்றை இழந்து விட்டீர்கள்” என்கிறார் எஸ் சிவராமன். இவர் பிரசாத் கலர் லேப் தொடங்கப்பட்ட 1976இல் அந்நிறுவனத்தில் சேர்ந்தவர்.

ஆயிரக்கணக்கான திரைப் படங்களில், நாட்டின் முக்கியமான இயக்குநர்களுக்காகவும் ஒளிப்பதிவாளர் களுக்காகவும் சிவராமன் பணியாற்றி யுள்ளார். தற்போது டிஜிட்டல் சினிமா வரவால் பிரசாத் லேப் மூடப்படுவதற்கு சாட்சியாக நிற்கிறார். டிஜிட்டல் பிம்பத்தில் ஒளித்துணுக்குகள் ஒரே நேர்கோட்டில் அமையும். ஆனால் பிலிமில் வெவ்வேறு விகிதத்தில் அமையும். எனவே பிம்பங்கள் மிக நேர்த்தியாகவும் துல்லியமாகவும் இருக்கும். டிஜிட்டல் சினிமாவை உருவாக்கக் குறைந்த காலமே தேவைப்படும். உலகத்தின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் விவரங்களைச் சேர்க்கலாம். எடுத்துக் காட்டாக, காட்சிகளை சென்னையில் தொகுக்கலாம். ஒலியை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து பதிவுசெய்யலாம். டிஜிட்டலில் படச்சுருள் இல்லை என்பதால் தேவையைவிடப் பத்து மடங்குவரை அதிகமான காட்சிகளைப் படமாக்கிவிடுகிறார்கள். இதனால் படத்தொகுப்பு வேலை பெரும் சுமை யாகிறது. படச்சுருள் பயன்படுத்திப் படமாக்கியபோது ஏற்பட்ட தயாரிப்புச் செலவைவிட டிஜிட்டல் சினிமாவை உருவாக்க அதிக செலவாகிறது என்பதே உண்மை. ஏனெனில் படச் சுருள் பயன்படுத்தப்படும் மரபான கேம ராவைவிட டிஜிட்டல் சினிமாவுக்குப் பயன்படும் ஏரி அலெக்ஸா போன்ற கேமராவின் பயன்பாட்டுக் கட்டணம் அதிகம். டிஜிட்டல் சினிமாவில் தொழில்நுட்ப உதவியுடன் எடிட்டிங் மேசையிலேயே தேவையான துல்லியத்தைக் கொண்டுவர முடியும். எனவே படச்சுருளைக் கொண்டு படமாக்கியபோது ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த முக்கியத்துவம் இதில் கிடைப்பதில்லை.

டிஜிட்டல் கேமரா பயன்படுத்த எளிதாக உள்ளதென்கிறார் ஒளிப்பதிவாளர் மது அம்பாட். மேம்பட்ட தரத்தில் காட்சிகளைப் பதிவுசெய்ய முடிகிறது என்றும் அவர் கூறுகிறார். ‘ஆதாமின்ட மகன் அபு’ திரைப்படத்திற்காக 2011ஆம் ஆண்டில் தேசிய விருது பெற்ற மது அம்பாட் அப்படத்தின் காட்சிகளை ஏர்ரி டி 21 கேமராவில்தான் படம்பிடித்துள்ளார். டிஜிட்டல் சினிமாவிலும் பல நன்மைகள் உள்ளன. கழிவாகும் படச்சுருள் சூற்றுச்சூழலுக்கு கேடுவிளை விக்கக்கூடியது. ஆனால் டிஜிட்டல் சினிமா சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எடிட்டிங் வேலைசெய்யும்போது படச் சுருளைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். டிஜிட்டல் சினிமாவில் இந்தப் பிரச்சினையே இல்லை. படத்தை வெளியீடு செய்வதும் எளிது. பிரதிகளின் எண்ணிக்கைக்கான செலவு பற்றிய கவலையே இல்லை. திரையரங்குகளுக்குத் திரையீட்டிற்காகப் படங்களை அனுப்புவதும் எளிது.

முன்பு நம்மிடம் புழங்கிய வீடியோ கேஸட்டுகள் சிடி, டிவிடி, ஹெச்டி, 3டி எனப் பலவிதமான பரிமாணங்களை அடைந்துவிட்டன. எனவே ஒரு படத்தை எந்தத் தொழில்நுட்பத்தில் பாதுகாத்து வைப்பது என்பதே முடிவுசெய்யப்படவில்லை. டிஜிட்டல் சினிமாவின் அளவைத் தேவை
யான அளவுக்கு குறைத்து அதிக எண்ணிக்கையிலான படங்களைச் சேமிக்க ஹார்ட் டிஸ்க் போன்ற தொழில் நுட்பங்கள் உதவுகின்றன. ஆனால் படங்களை அழுத்தி அதன் அளவைக் குறைக்கும் செயலில் தொழில்நுட்பப் பழுதால் திரைப்படத்தில் குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

டிஜிட்டல் சினிமா ஏராளமான இளைஞர்களைத் திரைப்படத் துறைக்கு இழுத்து வந்துள்ளது. மலையாளப் பட உலகம் இதற்குச் சான்றாக உள்ளது. புதிய இயக்குநர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும் திரைத்துறைக்கு வந்து வித்தியாசமான படங்களைக் கொடுத்துப் பெரிய அளவிலான வெற்றி பெறுகிறார்கள். ஏற்கனவே திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் சினிமாவால் பாதிப்படைந் துள்ளனர். அதிகப் பொருள் செலவில் வழக்கமான கதையமைப்பில் அவர்கள் உருவாக்கும் திரைப் படங்கள் முன்பு போல் வசூலை வாரிக்குவிப்பதில்லை. புதிய டிஜிட்டல் சினிமா உருவாக்கம் திரைப்படத்துறையில் நம்பகத்தன்மை யற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும் சினிமா சந்தையைப் பாழ்படுத்துவ தாகவும் திரைப்படத் துறையினர் பலர் எரிச்சலடைகிறார்கள்.

நிறபேதம் நீக்கிய டிஜிட்டல்

கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு வழக்கமான திரைப்படம் செய்துவந்த அநீதியை டிஜிட்டல் சினிமா அறவே நீக்கிவிட்டது. படச்சுருளால் உருவான திரைப்படத்தில் சருமத்தின் தோற்றத்தில் நடுநிலை காணப்படாது. கறுப்பு நிறம் கொண்ட நடிகர்கள் அடர்கறுப்பு சூட் அணிந்திருந்தால் திரையில் வெள்ளைச் சட்டையையும் பற்களையும் மட்டுமே பார்க்க இயலும். கறுப்பு நிறம் தன்மீது விழும் ஒளியை முழுமையாக உமிழாது. குறிப்பிட்ட சதவிகித ஒளியை உள்வாங்கிவைத்துக் கொள்ளும். எனவே கறுப்பு நிற நடிகர்கள் திரையில் தெரிய அதிக வெளிச்சம் தேவைப்படும். ஒளிப்பதிவாளர்கள் கறுப்பு நடிகர்களை கேமராவுக்கு முன்னர் நிறுத்தும்போது அவர்கள் உடம்பில் வாஸலின் போன்ற பொருளைத் தடவுவார்கள். அப்போதுதான் உடம்பில் படும் ஒளி பிரதிபலித்து கேமராவுக்குத் திரும்பும்.

டிஜிட்டல் கேமரா கறுப்பு நிறத்தில் காணப்படும் நுண்ணிய வேறுபாடு களையும் அப்படியே படமாக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் படத்தொகுப்பின் போதும் தேவையான மாற்றங்களைச் செய்ய டிஜிட்டல் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. கோடாக் நிறுவனம் ஷிர்லே என்னும் விளம்பர மாடலின் சருமத்தை அடிப்படையாகக் கொண்டே தங்கள் பிலிம் ரோலின் தரத்தை நிர்ணயித்தார்கள். கறுப்பு சாக்லேட் உற்பத்தியாளர்களும், கறுப்பு நிற ஃபர்னிச்சர்களை உருவாக்குபவர்களும் தங்கள் விளம்பரப் படங்கள் தரமற்று இருக்கிறது என கோடாக் நிறுவனத்திடம் புகார் செய்தனர். அதன் பின்னரே கறுப்பு நிறத்தைப் படமாக்கும் வகையில் அவர்கள் படச்சுருளைத் தயாரித்தார்கள். டிஜிட்டல் சினிமா என்னும் தொழில்நுட்ப மாற்றம் இந்த வரலாற்றுப் பிழையைப் போக்கிவிட்டது. நீண்ட காலத்துக்குப் பாதுகாக்கும் வசதி இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு வசப்படாமல் இருக்கலாம். ஆனால் கறுப்புத் தோல்களின் அடியில் மறைந்துகிடந்த உணர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பமே இன்று வெளிச் சத்துக்குக் கொண்டுவருகிறது.

©‘ஃப்ரண்ட் லைன் 2014’ ஆங்கிலத்தில் சசிகுமார். தமிழில். ந.செல்லப்பா.

சசிகுமார் கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளர், திரைப்பட இயக்குநர், நடிகர். இவர் ஊடக மேம்பாட்டு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்வி நிறுவனத்தை நடத்துவதுடன் அதன் தலைவராகவும் உள்ளார். ஏசியா நெட் மலையாள தொலைக்காட்சி அலைவரிசையை நிறுவியவர். இவர் கயா தரன் (Kaya Taran) என்னும் இந்திப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை உருவாக்கியதற்காக 2004 ஆம் ஆண்டில் ஜி அரவிந்தன் விருதைப் பெற்றுள்ளார். பத்திரிகைத் துறையில் சிறப்பாக பங்களித்ததற்காக 2007 இல் இவருக்கு விஜயராகவன் நினைவு விருது வழங்கப்பட்டது.